×

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உவரி போலீஸ் ஏட்டு சாவு

நெல்லை, மார்ச் 20: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உவரி போலீஸ் ஏட்டு, நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா பத்துகாணியை சேர்ந்தவர் விஜயகுமார் (50). இவர், கடந்த 1997ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார். கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றிய விஜயகுமார், கடந்த ஓராண்டாக திசையன்விளை அருகே உள்ள உவரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். நீரிழிவு, வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து விஜயகுமாரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தபோது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

அப்போது கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது. மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை ‘கொரோனா' பிரிவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று மாலை விஜயகுமார் இறந்தார். அவரது உடலுக்கு காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து விஜயகுமாரின் உடல் சொந்த ஊரான பத்துகாணிக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிசடங்குகள் நடந்தது.

Tags : Uvari ,
× RELATED நெல்லை நா.த.க. வேட்பாளர் மீது வழக்கு