×

நாங்குநேரியான் கால்வாயில் சிமென்ட் தளம் அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜா பேச்சு

நெல்லை, மார்ச் 20: நாங்குநேரியான் கால்வாயில் சிமென்ட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜா நேற்று பிரசாரத்தில் தெரிவித்தார். நெல்லை மாவட்ட அதிமுக செயலாளரும், நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை கணேசராஜா நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். நாங்குநேரி அருகே சிறுமளஞ்சி பகுதியில் இருந்து நேற்று பிரசாரத்தை தொடங்கி அவர் பேசியதாவது: ‘‘நாங்குநேரி தொகுதியின் அடையாளம் வாழைகளும், விவசாயிகளும்தான். திருக்குறுங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் ஏத்தன் ரக வாழைகளுக்கு வளைகுடா நாடுகளில் கடும் கிராக்கி உள்ளது. வாழைக்காய் சாகுபடியில் உள்ள நவீன தொழில்நுட்பங்களைக் கற்கவும், ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து சாமானிய விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தனியாக வாழை விவசாயிகளை காக்கும் குழுக்களை ஏற்படுத்துவேன்.

நாங்குநேரியான் கால்வாயின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அந்தக் கால்வாயில் சிமென்ட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாங்குநேரியில் பாலிடெக்னிக் அமைக்க பாடுபடுவேன். தாமிரபரணியில் இருந்து நாங்குநேரிக்கு சிறப்பு கூட்டுக்குடிநீர் திட்டம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். செங்கல் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அந்தத் தொழிலுக்கான மூலப்பொருள்கள் உரிய அனுமதியுடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும். நாங்குநேரி தொகுதியில் உற்பத்தி செய்யப்படும் பனைநார் பொருட்கள், கருப்புக்கட்டி, அலங்கார மின்விளக்குகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் நாங்குநேரி உற்பத்தி பொருள் விற்பனை அங்காடி பிரமாண்டமாக கட்டிக் கொடுக்கப்படும். முதியோர் ஓய்வூதியம் பெற தகுதியானவர்களுக்கு உதவும் வகையில் நாங்குநேரி எம்எல்ஏ அலுவலகத்தில் தனியாக உதவியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவில் கூடுதல் தொழிற்சாலைகளைக் கொண்டு வரவும், 5000 இளைஞர்களுக்கு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.’’ என்றார். தொடர்ந்து சிறுமளஞ்சி சுடலைமாடசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கிய அவர், தளபதிசமுத்திரம், கண்டியப்பேரி, வாகைகுளம், பட்டர்புரம், மாவடி, முத்துலாபுரம், ஏமன்குளம், சுப்பிரமணிபுரம், பெருமாள்நகர், பட்டர்பிள்ளைபுதூர், மலையடிபுதூர், நாங்குநேரி, பெரும்பத்து, மறுகால்குறிச்சி, வீரான்குளம், ஆழ்வார்குளம், தென்னிமலை உள்பட 45 கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தில் நெல்லை மாவட்ட பொருளாளர் சவுந்தர்ராஜன், நாங்குநேரி தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், முன்னாள் எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பெரியபெருமாள், முன்னாள் ஒன்றிய செயலாளர் சூரியகுமார், ஜெ. பேரவை செயலாளர் அசோக்குமார், எம்ஜிஆர் மன்ற செயலாளர் சுப்பையா, விவசாய அணி பிரேம்சிங், சிங்கநேரி பஞ். முன்னாள்  தலைவர் ராஜேந்திரன், பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,Tachai Ganesaraja ,Nangunerian ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...