×

சூளகிரி அருகே கோர விபத்து கார் மீது பார்சல் லாரி மோதியதில் இன்ஜினியர்கள் உள்பட 3 பேர் பலி

கிருஷ்ணகிரி, மார்ச் 20: சூளகிரி அருகே தறிகெட்டு ஓடிய பார்சல் லாரி கார் மீது மோதியதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 2 இன்ஜினியர்கள் பலியானதுடன், சிக்னல் கம்பம் சாய்ந்து விழுந்ததில் சாலையில் சென்ற வட மாநில தொழிலாளியும் பரிதாபமாக பலியானார். ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியை சேர்ந்த 7 இன்ஜினியர்கள் நேற்று முன்தினம் இரவு ஒரு சொகுசு காரில் சென்னை நோக்கி சென்றனர். இந்த காரை, அனந்தபூரை சேர்ந்த நந்தீஷ்ரெட்டி(27) என்பவர் ஓட்டிச் சென்றார். அமெரிக்காவில் பணிபுரியும் நண்பர்களான இவர்கள் 7 பேரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சாமல்பள்ளம் அருகே நேற்று காலை கார் சென்றபோது, ஓசூர் நோக்கி வந்த பார்சல் மினி லாரி ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி, எதிர்திசையில், வந்த சொகுசு கார் மீது வேகமாக மோதியது. இதில் காரில் இருந்த 7 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே நந்தீஷ்ரெட்டி மற்றும் ஷஷாங்க் ரெட்டி(27), இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 5 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக, கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பார்சல் லாரி அந்த பகுதியில் இருந்த சிக்னல் கம்பம் மீது மோதியதில், அது முறிந்து சாலையோரம் நின்றிருந்த ரூபேஷ் ராவ்(34) என்பவர் தலை மீது விழுந்தது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பீகாரை சேர்ந்த இவர், சூளகிரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதையடுத்து, அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பார்சல் லாரியின் பின்புறம், அந்த வழியாக வந்த ஒரு டேங்கர் லாரி மோதியதாலும்,

அதனைத் தொடர்ந்து, பார்சல் லாரி சொகுசு கார் மீது மோதியதாலும் அடுத்தடுத்து இந்த விபத்துக்கள் நிகழ்ந்து 3 பேர் பலியாகியுள்ளனர். விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து பார்சல் லாரி டிரைவர் மற்றும் டேங்கர் லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில், 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Choolagiri ,
× RELATED காரில் கொண்டு சென்ற ₹1.67 லட்சம் பறிமுதல்