சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் போட்டியிட 383 பேர் வேட்புமனுதாக்கல் அதிகபட்சமாக மேட்டூரில் 73 பேர் மனு

சேலம், மார்ச் 20:சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் போட்டியிட 383 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக மேட்டூரில் 73 பேரும், குறைந்தபட்சமாக ஆத்தூரில் 21 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி ெதாடங்கியது. இதனையடுத்து, திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பிலும், சுயேட்சையாகவும் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலுக்கு நேற்று இறுதிநாளாகும். இதனால், ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 11 தொகுதிகளிலும் உள்ள ஆர்டிஓ மற்றும் தாலுகா அலுவலகங்களில் இருந்தபடி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் அரசியல் கட்சியினர் சிலர், ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தனது பெயரிலும், மாற்று வேட்பாளர்கள் பெயரிலும் தாக்கல் செய்தனர். இடைப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 4 மனுக்களை தாக்கல் செய்துள்ளார். இறுதிநாளான நேற்று, மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்களும் களைகட்டின. சுயேட்சைகள் பலர், வித்தியாசமான முறையில் வந்து வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவுக்கு வந்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, 11 தொகுதிகளில் போட்டியிட 383 பேர், 412 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக, மேட்டூர் தொகுதியில் போட்டியிட 73 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக ஆத்தூர் தொகுதியில் 21 பேர் மட்டும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில், கெங்கவல்லி மற்றும் ஏற்காடு தொகுதியில் தலா 24 பேர், ஓமலூர் தொகுதியில் 38 பேர், முதல்வரின் இடைப்பாடி தொகுதியில் 48 பேர், சங்ககிரியில் 28 பேர், சேலம் மேற்கு தொகுதியில் 33 பேர், சேலம் வடக்கு தொகுதியில் 36 பேர், சேலம் தெற்கு தொகுதியில் 39 பேர் மற்றும் வீரபாண்டி தொகுதியில் 35 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீதான பரிசீலனை இன்று அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் நடக்கிறது.

தொடர்ந்து மனுக்களை வாபஸ் பெற வரும் 22ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆத்தூர், கெங்கவல்லியில் 45 மனுக்கள் தாக்கல்:ஆத்தூர்(தனி) தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் துரையிடம் திமுக, அதிமுக, இந்திய ஜனநாயகம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். நேற்று மட்டும் சுயேச்சை உள்ளிட்ட 21 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் இதுவரை 45 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>