×

நாமக்கல் - மோகனூர் நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

நாமக்கல், மார்ச் 20: நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலை, கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு விரிவுபடுத்தப்பட்டது. ஆனால், சரியாக பராமரிக்காததால் சாலையையொட்டியுள்ள பயணிகள் நிழற்கூடம் புதர் மண்டி காணப்படுகிறது. 4 வழிச்சாலையாக மாற்றப்பட்ட பகுதியில் உள்ள பூங்காங்கள் பராமரிப்பின்றி உள்ளது. நெடுஞ்சாலையில் பரளி பேருந்து நிறுத்தத்திற்கும், நெய்காரன்பட்டி பேருந்து நிறுத்தத்திற்கும் இடையில் மூங்கில்பட்டி பிரிவு சாலை அருகில், பிரதான குடிநீர் குழாயில் உடைப்பெடுத்து சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுதொடர்பாக காவிரி நீரேற்று பாசன சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் கலெக்டர் மெகராஜிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அகலப்படுத்தப்பட்ட சாலையை சரியாக பராமரிக்கவில்லை. பரளி - நெய்காரன்பட்டி இடையில் சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறும் இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. நாளாக, நாளாக பெரிய பள்ளமாக மாறி, சாலை பழுதடைந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குழாய் உடைப்பை சரி செய்து, சாலையை புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Namakkal - Mohanur highway ,
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு