×

சேந்தமங்கலம் அருகே பாறைக்கு வைத்த வெடியால் எழுந்த கடும் புகை வாகன ஓட்டிகள் பாதிப்பு

சேந்தமங்கலம், மார்ச் 20: சேந்தமங்கலம் அருகே கல்குவாரியில் பாறைக்கு வெடி வைத்ததில் எழுந்து கடும் புகையால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பொட்டணம் ஊராட்சி தண்டிக்கரடு மலையில் அதிகளவில் கனிமவளம் உள்ளது. இங்கு, 5க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கற்களை உடைப்பதற்காக தினமும் வெடி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் பெரிய அளவிலான பாறையை உடைக்க, சக்திவாய்ந்த வெடி வைத்துள்ளனர். அது வெடித்து சிதறியதில் பாறை துகள்கள் பறந்தன.

உடைந்த பாறைகளில் இருந்து எழுந்த புகை மூட்டம், சேந்தமங்கலம் - புதன்சந்தை சாலையை சூழ்ந்துகொண்டது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். முகப்பு விளக்கை எரிய விட்டபடியே வாகனங்கள் ஊர்ந்து சென்றன. டூவீலரில் சென்ற சிலர், சாலை தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கினர். இங்குள்ள குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட, அதிகளவில் வெடி மருந்தை பயன்படுத்துவதால், பாறைகள் வெடித்து சிதறி புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தினமும் இதுபோன்ற சக்திவாய்ந்த வெடிகள் வைக்கப்படுகிறது.

அருகிலுள்ள விவசாய நிலம் முழுவதும் கற்கள் பறந்து வந்து விழுகிறது. மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடு- மாடுகள் கற்கள் விழுந்ததில் உயிரிழந்துள்ளன. இப்பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளது. அங்கு வசிப்பவர்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது. வீடு முழுவதும் பாறை மண் விழுந்ததால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. புகார் கூறினாலும் கனிமவள அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. கடந்தாண்டு கொண்டமநாயக்கன்பட்டியில் கல் கிரசர் வெடி வெடித்ததில் பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். அவரது தம்பி கால் துண்டிக்கப்பட்டு படுகாயமடைந்தார். எனவே, தினமும் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Chentamangalam ,
× RELATED சேந்தமங்கலம் அருகே துணிகரம் அடகு கடை...