100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி, மார்ச் 20: கிருஷ்ணகிரியில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் திரளாக பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணி மற்றும் நவீன மின்னணு வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளிலுள்ள 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், முதல் தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்கும் விதமாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

மேலும், அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மகளிர் திட்டம், சுய உதவிக்குழுக்கள், வருவாய் மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர்கள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு குறித்து முகாம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவ- மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி பேரணியாக சென்றனர். இந்த பேரணியானது ராயக்கோட்டை சாலை வழியாக புதிய பஸ் நிலையத்தை சென்றடைந்தது. சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்ற மாவட்டமாக உருவாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, மாவட்டத்திலுள்ள 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு நவீன மின்னணு வாக்காளர் விழிப்புணர்வு வாகனம் என 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 நவீன மின்னணு வாக்காளர் விழிப்புணர்வு வாகனங்களை சொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலரும், கலெக்டரின் நேர்முக உதவியாளருமான(சிறுசேமிப்பு) தேவராஜ், துணை தாசில்தார்(அரசு கேபிள் டிவி) பொன்னாலா, கல்லூரி முதல்வர் லட்சுமி, பிஆர்ஓ ராம்குமார் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>