மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வெண்ணைத்தாழி உற்சவம்

மன்னார்குடி, மார்ச் 20: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனி பிரமோற்சவ பெருவிழாவின் முக்கிய விழாவான வெண்ணைத்தாழி உற்சவம் நேற்று நடைபெற்றது. கண்ணன் திருக்கோலத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில் பிரசித்தி பெற்ற வைணவத் தலமாகும். இக்கோயிலில் ஆண்டு தோறும் 18 நாட்கள் நடைபெறும் பங்குனி பிரமோற்சவ பெருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய விழாக்களான வெண்ணைத்தாழி உற்சவம் நேற்று காலை நடைபெற்றது. நவநீத சேவையையொட்டி பெருமாள் கண்ணன் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கோயிலை சுற்றி உள்ள நான்கு ராஜ மாட வீதிகளிலும் பெருமாள் திருவீதியுலா சென்றபோது பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள் பெருமாள் மீது வெண்ணெயை சாற்றி பக்தியுடன் வழிபட்டனர். பின்னர், வெண்ணைத்தாழி மணடபத்திற்கு சென்ற பெருமாளுக்கு அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது பெருமாள் செட்டி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர், யானை வாகன மண்டபத்திற்கு வந்தார். அங்கும் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், பெருமாள் ராஜ அலங்காரத்தில் தங்க வெட்டுங்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை தாளாளர் திவாகரன், எஸ்எம்டி நிறுவனங்களின் உரிமையாளர் கருணாநிதி உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். டிஎஸ்பி இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். மேலும், மன்னார்குடியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் நேற்று மாலை முதல் மூடப்பட்டன.

Related Stories:

>