மன்னார்குடி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு

மன்னார்குடி, மார்ச் 20: தமிழக தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள பொது தேர்தல் பார்வையாளர் சந்திரமோகன் பிரசாத் காஷ்யப், மன்னார்குடி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கண்காணித்திட தேர்தல் கண்காணிப்பு குழு, தேர்தல் செலவின கண்காணிப்பு குழு, 24 மணி நேரமும் மாவட்டம் முழுவதும் கண்கானித்திட பறக்கும் படையினர், நிலை கண்காணிப்புக் குழுவினர் மற்றும் ஊடக சான்று மற்றும் ஊடக கண்காணிப்பு குழுக்கள் என பல்வேறு குழுக்கள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி தொகுதிகளில் நடந்துவரும் தேர்தல் பணிகளை கண்கானிக்க பொது தேர்தல் பார்வையாளராக சந்திரமோகன் பிரசாத் காஷ்யப் என்ற அதிகாரியை மாநில தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. இவர் 2 சட்டமன்ற தொகுதிகளில் நடந்துவரும் தேர்தல் பணிகளை தொகுதி வாரியாக சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதன்படி, பொது தேர்தல் பார்வையாளர் சந்திரமோகன் பிரசாத் காஷ்யப் மன்னார்குடி தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு வந்து திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், தேர்தல் நடத்தை விதிகளை கண்டிப்பாக அமல்படுத்துதல், சுவரெழுத்துக்கள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றுதல் குறித்தும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் அழகர்சாமியிடம் அறிவுறுத்தினார். மேலும், தேர்தல் அமைதியாக நடைபெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அளித்த வேட்பு மனுக்களை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் நேர்முக உதவியாளர் மலர்கொடி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தெய்வநாயகி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் இளங்கோவன், தொடர்பு அதிகாரி இன்னாசிராஜ் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories:

>