×

4 பேராசிரியர்கள், ஒரு மாணவிக்கு கொரோனா புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரி மூடல்

புதுச்சேரி, மார்ச் 20: புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரியில் 4 பேராசிரியர்கள், ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் வரும் 28ம் தேதி வரை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு கல்லூரி மூடப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 40,262 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 39,271 பேர் குணமடைந்த நிலையில் 674 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக வெகுவாக குறைந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று 61 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது

இந்நிலையில் முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறையில் 2 பேர், இயற்பியல், பொருளாதாரவியல் துறைகளில் தலா ஒருவர் என 4 பேராசிரியர்களுக்கும், ஒரு மாணவிக்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது. கல்லூரி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவிகளுக்கு கடந்த 15ம் தேதி செமஸ்டர் தேர்வு துவங்கிய நிலையில் கொரோனா பரவல் காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.

இத்தேர்வை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதலாமாண்டு மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே வரும் 28ம் தேதி வரை வகுப்புகள் கிடையாது. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. பள்ளி ஆசிரியைக்கு பாசிடிவ்: புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள சுப்ரமணி பாரதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் பணியாற்றிய வகுப்பறை மட்டும் மூடப்பட்டு, மாணவிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

Tags : Corona ,Bharathidasan Women's College ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...