×

அதிமுக அமைச்சர் குட்டி ஜப்பானை குட்டி சுவராக மாற்றி விட்டார் சாத்தூர் ராமச்சந்திரன் தாக்கு

சிவகாசி, மார்ச் 20:சிவகாசி சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமை வகித்தனர். சிவகாசி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜி.அசோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், ‘சிவகாசியில் பட்டாசு, அச்சு, தீப்பெட்டி தொழில்கள் பிரதானமாக நடப்பதால் குட்டி ஜப்பான் என பெயரெடுத்த நகரம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் செயலற்ற நிர்வாகத்தால் சிவகாசி குட்டி சுவராக மாறிவிட்டது. ரோடுகள் மிக மோசமாக உள்ளது. பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட பணிகள் நிறைவேற்றப்படவில்லை.

மக்கள் கடும் துயரில் உள்ளனர். நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற போவது உறுதி. காங்கிரஸ் வேட்பாளர் பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவர். அவர் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தேர்தலில் போட்டியிருக்கிறார். அவர் வெற்றி பெற்றால் சிவகாசி நகரம் மீண்டும் தொழில் துறையில் சாதனை புரியும். திமுக, கூட்டணி கட்சியினர் கடுமையாக உழைத்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார்.  எம்எல்ஏ தங்கம் தென்னரசு பேசுகையில், சிவகாசி தொகுதி வேட்பாளர் ஜி.அசோகன் உங்கள் தொகுதி பிரச்னைகளை நன்கு அறிந்தவர். குறிப்பாக சிவகாசி பட்டாசு தொழிலில் உள்ள பிரச்னைகளை நன்கு தெரிந்தவர்.

பட்டாசு தொழிலுக்கு இனி ஒரு பிரச்சனை என்றால் உங்கள் ஊரை சேர்ந்த அசோகனின் குரல் சட்டமன்றத்திலே ஒலிக்கும். சிவகாசி தொகுதி கடந்த 10 ஆண்டுகளாக இழந்த பெருமையை மீட்டெடுக்க அசோகனை தோ்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஜி.அசோகன் பேசுகையில், நான் வசதிப டைத்தவன். மக்களின் கோரிக்கையை செவிகொடுக்க மாட்டேன் என சிலர் அவதூறு பிரசாரம் செய்கின்றனர்.

நான் ஏற்கனவே நகராட்சி துணை தலைவராக சிறப்பாக பணியாற்றி இருக்கிறேன் என்பது மக்களுக்கு தெரியும். தேர்தலில் வெற்றி பெற்றால் மக்கள் பிரச்னைகளை தீர்க்க மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றுவேன். மக்கள் தங்கள் பிரச்னைகளை எனது வீடு, அலுவலகம் என எங்கு  வேண்டுமானாலும் வந்து தெரிவிக்கலாம்’ என்றார். கூட்டத்தில் தொகுதி தோ்தல் பொறுப்பாளர் வனராஜா, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,Minister ,Kutty ,Japan ,Sattur Ramachandran ,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...