×

சாலை, குடிநீர் வசதி செய்து தராதததை கண்டித்து இளைஞர்கள் கருப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு செந்துறை அருகே பரபரப்பு

அரியலூர், மார்ச் 20: செந்துறை அருகே நல்லநாயகபுரம் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி, ரேஷன் கடை, குடிநீர் வசதி செய்து தரவில்லை எனக்கூறி வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கிராம தெருக்களில் இளைஞர்கள் கருப்புக்கொடி கட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள வஞ்சினபுரம் ஊராட்சிக்குட்பட்ட நல்லநாயகபுரம் கிராமத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சாலைகள் போடப்படாமல் குண்டும் குழியுமாக பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கடந்த இரண்டு முறை ஊராட்சி தலைவர் வஞ்சினபுரம் கிராமத்தை சேர்ந்தவராகவும், இந்தமுறை பெரும்பாண்டி கிராமத்தை சேர்ந்தவராகவும் உள்ளனர். இதனால் இந்த கிராமத்தின் அடிப்படை தேவைகளை செய்யவில்லை என குற்றம்சாட்டினர் கிராமத்தினர்.

இது குறித்து, அரசு அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இங்கு சாலை அமைக்க ஒப்பந்தம் எடுத்தும் இதுவரை சாலைப்பணி துவங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக நல்லநாயகபுரம் கிராம வீதிகளில் கருப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பணி ஆணை வழங்கியும் தொடங்கப்படாமல் உள்ள பணியினை உடனடியாக செய்து தருவதாக கூறி கட்டப்பட்ட கருப்புக் கொடிகளை அகற்றினர். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Sendurai ,
× RELATED செந்துறையில் டீக்கடையில் காஸ் கசிவு