சிவகங்கை மாவட்டத்தில் 111 பேர் வேட்பு மனுத்தாக்கல் திருப்பத்தூர் தொகுதியில் அதிகம்

சிவகங்கை, மார்ச் 20: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட 111 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஏப்.6ல் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 12 முதல் நேற்று வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குணசேகரன், அதிமுக சார்பில் செந்தில்நாதன், அமமுக சார்பில் அன்பரசன், மநீம கூட்டணியில் சமக சார்பில் நேசம்ஜோசப் உள்பட 26 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் தமிழரசிரவிக்குமார், அதிமுக சார்பில் நாகராஜன், அமமுக சார்பில் மாரியப்பன்கென்னடி உள்பட 20 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன், அதிமுக சார்பில் மருதுஅழகுராஜ், அமமுக சார்பில் உமாதேவன் உள்பட 35 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாங்குடி, பாஜக சார்பில் எச்.ராஜா, அமமுக சார்பில் தேர்போகிபாண்டி உள்பட 30 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மொத்தம் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை உள்பட 111 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக திருப்பத்தூர் தொகுதியில் 35 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனுத்தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று 40 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இன்று மனு பரிசீலனை செய்யப்படுகிறது. இதில் வேட்பாளர்கள் மனு ஏற்கப்பட்டபின், மாற்று வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் உள்ளிட்ட நிறைய மனுக்கள் வாபஸ் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 22 ஆகும்.

Related Stories:

>