×

சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி மறுப்பு சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க நம்பியார்நகர் மீனவர்கள் முடிவு

நாகை, மார்ச் 20: தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி வழங்காத தமிழக அரசை கண்டித்து சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக நாகை நம்பியார்நகர் மீனவர்கள் தெரிவித்தனர். நாகை நம்பியார்நகர் மீனவ கிராமத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்ட முடிவில் நாகை நம்பியார் நகரை சேர்ந்த கந்தசாமி கூறியதாவது: நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் மீனவர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வந்தோம். இந்ந்லையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்தது.

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தால் கடல் வளம் அழியும் என்பதால் இதை பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க கூடாது என்று தமிழக அரசு கடந்தாண்டு தடை உத்தரவும் பிறப்பித்தது. இதன் காரணமாக சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து வந்த மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியது. இதேபோல் நாகை நம்பியார் நகர் பகுதியில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்த அவசர ஆலோசனை கூட்டம், நம்பியார்நகர் பகுதியில் நடத்தப்பட்டது. இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.

அனுமதி வழங்காத தமிழக அரசை கண்டித்து நம்பியார்நகர் மீனவர்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுகிறோம். நம்பியார் நகர் பகுதியில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி பிழைப்பு நடத்துவோர் 1,500 மீனவர்களுக்கு மேல் உள்ளோம். 4,000 வாக்குகள் உள்ளது. அமைச்சர், கலெக்டரை சந்தித்து பேசியும் தீர்வு எட்டப்படவில்லை. எனவே சுருக்குமடி வலை பயன்படுத்த அரசு அனுமதி அளிக்கவில்லை என்றால் தேர்தல் நெருங்கும் நாட்களில் பலகட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

Tags : Nambiarnagar ,
× RELATED நம்பியார்நகர் மீனவ கிராமத்தில் ரூ.6.35...