சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநில எல்லையோர செக்போஸ்ட்களில் வாகன சோதனையை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்

ஊட்டி, மார்ச் 20: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மது விற்பனை பார் உரிமையாளர்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க துறையினருடனான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஊட்டியில் நடந்தது. இதில், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து பேசியதாவது: உரிமம் பெற்றுள்ள எப்எல்3., உரிமதாரர்கள் உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவில் மதுபானங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். எப்எல்2., உரிமதாரர்கள் கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டும் மது வழங்க வேண்டும்.

மேலும் அனுமதித்துள்ள நேரத்தில் அதாவது பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மதுபான கூடத்தில் விற்பனை மேற்கொள்ளப்பட வேண்டும். மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனைக்கான பதிவேடுகளை நாள்தோறும் பராமரித்திட வேண்டும். கோவிட் தொடர்பாக அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மது விற்பனை செய்ய வேண்டும். விதிமீறல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பார் உரிமதாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு சோதனை சாவடிகளையும், கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்.

சோதனை சாவடிகளில் சோதனைகளை தீவிரப்படுத்தவும், தேர்தல் பரிசு பொருட்கள் பரிமாற்றம், பணம் மற்றும் மதுபானம் ஆகியவற்றை எடுத்து செல்வதை தடுக்க பாதுகாப்பினை அதிகப்படுத்திட வேண்டும். மதுபான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் எஸ்பி. பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சேகர், கலால் உதவி ஆணையர் மணி, எப்எல்3., எப்எல்2., உரிமதாரர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>