திருச்சி- ெசன்னை தேசிய நெடுஞ்சாலை ஊட்டத்தூர் பிரிவுச்சாலை பகுதியில் மேம்பாலம் கட்டப்படுமா?

பாடாலூர், மார்ச் 19:  திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு கடந்த 2009ம் ஆண்டு முதல் போக்குவரத்திற்காக பயன்பாட்டிற்கு வந்தது. திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒருபுறம் இருந்து சாலையின் மற்றொரு புறத்திற்கு செல்லும் வகையில் பாதை விடப்பட்டுள்ளது. அதன்படி ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் ஊட்டத்தூர் வழியாக புள்ளம்பாடி செல்லும் சாலைப் பகுதியிலும் பாதை விடப்பட்டுள்ளது. ஆலத்தூர் தாலுகா பாடாலூர் சுற்றுப்புற கிராமங்களான காரை, தெரணி, ஊட்டத்தூர், சிறுகளப்பூர், நம்பகுறிச்சி, கூத்தனூர், நெடுங்கூர், மணியாங்குறிச்சி, இரூர், ஆலத்தூர்கேட், பெருவளப்பூர், தெரணிபாளையம், பி.கே.அகரம், அழுந்லைப்பூர், வரகுப்பை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வணிகத் தலமாக விளங்கி வருகிறது. விவசாயத்திற்கு தேவையான விதைகள், உரம், பூச்சிமருந்து உள்ளிட்ட பொருள்களும், அத்திவாசியப் பொருள்கள் வாங்குவதற்கும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை இருவழிச் சாலையாக இருந்து நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டபோது ஒரு சில இடங்களில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், முக்கியப் பிரிவுச்சாலையான ஊட்டத்தூர் பிரிவுச் சாலைப் பகுதியில் மேம்பாலம் அமைக்காமல் விட்டு விட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அதி வேகத்தில் செல்கின்றனர். இந்நிலையில் ஊட்டத்தூர் பிரிவுச்சாலை பகுதியில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையை கடக்கும் போது நாள்தோறும் விபத்து ஏற்படுகிறது.

ஆனால், சுமார் 10 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான விபத்துக்கள் நடந்த நிலையிலும் இதுவரை மாவட்ட நிர்வாகமோ, தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமோ மேம்பாலம் அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து பெரியளவில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும்போது அவ்வப்போது உள்ள மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வந்து ஆய்வு செய்து விட்டு செல்வார்கள். ஆனால், ஆய்வு செய்துவிட்டு சென்ற பின்னர் மேம்பாலம் அமைப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அதேபோல் தேர்தல் வந்தால் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிப்பார்கள். ஆனால் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பாடாலூர் ஊட்டத்தூர் பிரிவுச்சாலைப் பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

>