×

பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு பாதி கட்டண சலுகை வழங்க வேண்டும்

ஜெயங்கொண்டம். மார்ச் 19: பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு பாதி கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று பென்ஷனர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்ட மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் கூட்டமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுந்தரேசன் தலைமை வகித்தார். பொருளாளர் ராமமூர்த்தி, நிதி உதவி திட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டச் செயலாளர் கலியமூர்த்தி அறிக்கை வாசித்தார். கவுரவத் தலைவர் சிவசிதம்பரம், வெங்கடாசலம், ராஜகோபால் , சண்முகசுந்தரம் ஆகியோர் தீர்மானங்களை விளக்கி பேசினர். கலியமூர்த்தி, கலியபெருமாள், செங்குட்டுவன், சாமிதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும், கும்பகோணத்திலிருந்து ஜெயங்கொண்டம் பண்ருட்டி வழியாக சென்னை செல்லும் பேருந்துகளை விருத்தாசலம் வழியாக செல்வதற்கு ஆவன செய்ய வேண்டும். பென்ஷனர்களுக்கு விடுபட்டுள்ள 21 மாத ஊதியத்தை உடன் வழங்க வேண்டும். பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு பாதி கட்டணச் சலுகை வழங்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். கணபதி வரவேற்றார். ராமசாமி நன்றி கூறினார்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது