×

தண்ணீர் பிரச்சனையை தீர்க்காததை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிய கிராமமக்கள் திருச்சுழி அருகே பரபரப்பு

திருச்சுழி, மார்ச் 19: திருச்சுழி அருகே உபரிநீர் வரும் வரத்து கால்வாய் சம்மந்தமாக நடவடிக்கை எடுக்காததால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக  கிராமத்தில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சுழி அருகே உள்ளது மைலி கிராமம். இங்குள்ள கண்மாய்க்கு கீழ் இடையாங்குளம் கண்மாய் நிரம்பி கால்வாய் மூலம்  உபரிநீர் வரும்.  இதற்கு கீழ் இடையாங்குளம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மைலி கிராம கண்மாய்க்கு உபரிநீர் வருவதை தடுத்து நிறுத்தினர். கடந்த வருடம்  அதிகாரிகள் சர்வே நடத்தி சரியாக உள்ளதாக கூறி, அடைக்கப்பட்டிருந்த   உபரி நீர் வரும் கால்வாயை  சீரமைத்து கொடுத்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கண்மாய் நிரம்பி உபரி நீரை திறப்பதற்காக சென்றனர். அப்போது இரு கிராமத்திற்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அப்போது வருவாய் துறை அதிகாரிகள், கீழ் இடையாங்குளம் கிராமத்தினர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர், ஆகையால் திறக்க இயலாது என கூறினர். இதற்கு மைலி கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது ரேஷன் கார்டுகளை திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.  

மேலும் இது சம்மந்தமாக சில தினங்களில் தீர்வு காணப்படும் என திருச்சுழி தாசில்தார் உறுதியளித்தார். இதன் பேரில் மைலி கிராம மக்கள் அமைதி காத்தனர். பின்பு இது சம்மந்தமாக மைலி கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஆர்டிஓ முருகேசன்  தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாததால் தங்களின் வாக்காளர் அட்டையை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு சென்றனர். இதுவரை ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அட்டையையும் கிராமமக்கள் பெறாமல் உள்ளனர். இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த மைலி கிராம மக்கள் வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டியுள்ளனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Tiruchirappalli ,
× RELATED பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.....