×

சிவகங்கை மாவட்ட ஊராட்சிகளில் மோட்டார் வாங்கியதில் மெகா முறைகேடு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத சிபிசிஐடி போலீஸ்

சிவகங்கை, மார்ச் 19: சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சிகளில் மோட்டார் வாங்கியதில் முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க உயர்நிலை அலுவலர்கள் கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் இரண்டு நாட்கள் ஆய்வு நடத்தினர். இதில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்புத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மின் மோட்டார்கள், குளோரின் மாத்திரைகள் கொள்முதல் செய்ததில் ஊழல் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்ட செயல்முறைகளும், வட்டார வளர்ச்சி அலுவலர்களால் நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளிகளும் ஒரே தேதியில் இருந்தது எப்படி என ஆய்வறிக்கையில் கேட்கப்பட்டது. நீர்மூழ்கி மோட்டார்கள் ஒன்றிய பொதுநிதியிலிருந்து அதிக எண்ணிக்கையில், பல மடங்கு கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 73 மோட்டார்கள் ரூ.28 லட்சத்து 18 ஆயிரத்து 634க்கும், உதிரிபாகங்கள் ரூ.15 லட்சத்து 26 ஆயிரத்து 40க்கும், சிவகங்கையில் 86 மோட்டார்கள் ரூ.26 லட்சத்து 89 ஆயிரத்து 779க்கும், தேவகோட்டையில் 106 மோட்டார்கள் ரூ.37 லட்சத்து 10 ஆயிரத்து 932க்கும், உதிரிபாகங்கள் ரூ.14 லட்சத்து 71 ஆயிரத்து 680க்கும் கொள்முதல் செய்ததாக ஆவணத்தில் உள்ளது.

கொள்முதலில் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் முறைகேடு நடந்தது குறித்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் சிபிசிஐடி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் புகார் அளித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் வீரபாண்டி கூறியதாவது: தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து பவர் பம்புகளும் நூறு சதவீதம் இயங்கி வருவதாக 16.05.2017 அன்றைய கடிதத்தில் சென்னை ஊரக வளர்ச்சி இயக்குனரகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மோட்டார் மற்றும் உதிரி பாகங்கள் வாங்கியதாக ரூ.51 லட்சம் கணக்கு காட்டியுள்ளனர். மோட்டார் மற்றும் உதிரிபாகங்கள் வாங்கியது வட்டார வளர்ச்சி அலுவலகர்களுக்கே தெரியவில்லை. இப்பிரச்சனையில் கொள்முதல் குழுவில் இருந்த மாவட்ட திட்ட இயக்குநர் உள்பட அலுவலர்கள் மீது கண்துடைப்பு நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ள இப்பிரச்சனை குறித்து உரிய ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்ட துறை மற்றும் சிபிசிஐடி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : CBCID ,Sivagangai ,
× RELATED பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன்...