×

பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கியதில் முறைகேடு ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு

காளையார்கோவில், மார்ச் 19: காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுமார் 400 ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.10 யிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வட்டார வளமை மையம் மூலமாக வழங்கப்பட்டன. ஆனால் வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் ரூ.3 ஆயிரம் கூட தேறாது, இதில் முறைகேடு நடந்துள்ளது என்று பள்ளி நிர்வாகிகள் கூறுகின்றனர். இது குறித்து பள்ளி தலைமை ஆசியர்கள் கூறுகையில், ‘‘பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு கல்வித்துறை மூலம் ரூ.10 ஆயிரம் நிதி ஒதுக்கப்படுவது உண்டு. ஆனால் உபகரணங்கள் எங்களை வாங்க வேண்டாம், நாங்களே அனுப்பி விடுகிறோம். ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையில் கையொப்பம் இட்டு கொடுத்து அனுப்பவும் என்று துறை சார்ந்து உத்தரவு வரும். அதன்படி இதுவரையிலும் செய்து வருகின்றோம்’’ என்றனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி துணைத்தலைவர் ஜோசப்ரோஸ் கூறுகையில், ‘‘அனைத்து பள்ளிகளிலும் உள்ள நூலகங்களுக்கு புத்தகம் வாங்குவதற்கு கல்வித்துறை அறிவிக்கும் பணத்தில் இருந்து சுமார் 30 சதவிகிதம் மதிப்பிலான புத்தகங்கள் மட்டும் அந்தந்த பள்ளி நூலகத்திற்கு வந்த சேரும். மீதம் உள்ள 70 சதவிகிதம் பணம் என்ன ஆகிறது என்று எங்களுக்கு தெரியாது? எங்களிடம் கல்வித்துறை அறித்த முழுதொகைக்கான காசோலையில் கையொப்பம் வாங்கிவிட்டு சென்று விடுவார்கள். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் புகார் அளிப்பது ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மட்டும். இதேபோல் தொடக்கப்பள்ளி மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அப்பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவார்கள். அதில் எவ்வளவு கொள்ளை என்று தெரியவில்லை’’ என்றார்.

Tags : Teachers' Alliance ,
× RELATED தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா