×

பாஜவின் அங்கீகார கடிதம் இல்லாததால் டாக்டர் சரவணன் மனுதாக்கலில் தாமதம்

மதுரை, மார்ச் 19: பாஜவின் அங்கீகார கடிதம் சமர்ப்பிக்காததால் பாஜ வேட்பாளர் டாக்டர் சரவணனின் வேட்புமனு தாக்கலில் தாமதம் ஏற்பட்டது. ஊர்வலமாக வந்தபோது தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
 மதுரை வடக்குதொகுதி பாஜ வேட்பாளரை மாற்றி விட்டு, காலையில் கட்சியில் சேர்ந்த டாக்டர் சரவணனுக்கு சீட் வழங்கியதால் புதூரில் உள்ள கட்சி அலுவலகத்தை பூட்டி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பரபரப்புக்கு பின்னர் டாக்டர் சரவணன், வடக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஊர்வலமாக வந்தனர். அப்போது, 100 மீட்டருக்கு முன்பு பேரிகாட் அமைந்த பகுதியில் வேட்பாளர் டாக்டர் சரவணன், மத்திய இணையமைச்சர் வி.கே.சிங், அதிமுக முன்னாள் மண்டலத்தலைவர் ஜெயவேல் உள்பட 6பேரை வடக்கு தொகுதி தேர்தல் அலுவலகத்திற்கு செல்ல அனுமதி அளித்தனர். மற்றவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதில் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம்குமாரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது மதுரை மாவட்ட பாஜ தலைவரின் அங்கீகாரக்கடிதத்தையும் சேர்த்து சமர்ப்பித்தார். இதனை ேதர்தல் நடத்தும் அலுவலர் பிரேம்குமார் ஏற்க மறுத்து, கட்சியின் மாநிலத்தலைவர் எல்.முருகன் கையொப்பம் இட்ட அங்கீகார கடிதம் தேவை என்றார். இந்த கடிதம் தொடர்பாக மனுதாக்கலின் போது 3மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் வேட்பாளரின் மனைவி கனிமொழி, மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். அங்கீகார கடிதம் தொடர்பாக எல்.முருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கையொப்பம் இட்டு கடிதத்தை அனுப்பி வைப்பதாக பதில் தெரிவித்தார். அக்கடிதம் வந்ததும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைப்பதாக வேட்பாளர் டாக்டர் சரவணன் உறுதியளித்து விட்டு திரும்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Dr. ,Saravanan ,BJP ,
× RELATED தொப்பையால் உருவாகும் நோய்கள்!