கொடியேற்றத்துடன் கோலாகலமாய் திருப்பரங்குன்றம் கோயிலில் துவங்கியது பங்குனி திருவிழா ஏப்.1ம் தேதி தேரோட்டம்

திருப்பரங்குன்றம், மார்ச் 19: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்  துவங்கியது. முருகப்பெருமானின் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம்  சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம்  பங்குனித் திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு பங்குனி திருவிழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத்தொடர்ந்து சுப்பிரமணியசுவாமி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள்  செய்யப்பட்டு உற்சவர் சன்னதியில் இருந்து கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் கம்பத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு காலை 11.30 மணி முதல் 11.45 மணிக்குள் கொடியேற்றப்பட்டது.

நேற்று துவங்கிய பங்குனித் திருவிழா ஏப்.2 ம் தேதி நிறைவடைகிறது. மார்ச் 30ம் தேதி மாலை பட்டாபிஷேகமும், 31ம் தேதி திருக்கல்யாண வைபவமும், ஏப்.1ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தன்று காலை திருத்தேர் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் கிரிவலப்பாதையில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த தேரோட்டத்தில் மதுரை மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். திருவிழாவிற்கு தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

Related Stories:

>