×

உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ₹3.47 லட்சம் பறிமுதல் பேரணாம்பட்டு அருகே

பேரணாம்பட்டு, மார்ச் 19: பேரணாம்பட்டு அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ₹3.47 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குவதை தடுக்க மாவட்டங்களில் பல பகுதிகளிலும், மாவட்ட எல்லையிலும் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.அதன்படி குடியாத்தம்(தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல்பட்டி அடுத்த உள்ளி கூட்டுரோட்டில் தோட்டக்கலை உதவி இயக்குனர் அனுசியா மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக கர்நாடகா பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் உரிய ஆவணமின்றி ₹1.47 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்து விசாரித்தனர். அதில் தனகொண்டபல்லியை சேர்ந்த மதன்குமார்(27) என்பதும், இவர் கர்நாடகாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு செல்வது தெரிந்தது. இதையடுத்து அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து பேரணாம்பட்டு தாசில்தார் கோபியிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல், பேரணாம்பட்டு அடுத்து பத்தலப்பல்லி சோதனை சாவடியில் நேற்று பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணமின்றி ₹2 லட்சம் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியதில், சித்தூர் மாவட்டம், குப்பம் தாலுகா, பெல்லகோகிலா கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா ரெட்டி(46) என்பதும், அவர் தான் வாங்கிய டிராக்டருக்கு பைனான்ஸ் கட்டுவதற்காக குடியாத்தம் நகரத்திற்கு செல்வதாக கூறினார். மேலும், அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரி செல்வம், உதவி ஆய்வாளர் ராமானுஜம் மற்றும் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஷேக் மன்சூரிடம் ஒப்படைத்தனர். அப்போது பேரணாம்பட்டு தாசில்தார் கோபி, உதவி ஆய்வாளர்கள் ராமானுஜம், கோடீஸ்வரன் ஆகியோர் இருந்தனர்.

Tags : Peranampattu ,
× RELATED வேனுடன் 210 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி,...