×

அண்ணனூரில் குண்டும், குழியுமான ரயில்வே ஸ்டேஷன் சாலை: ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

ஆவடி, மார்ச் 19:     ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையில் இருந்து அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு சாலை செல்கிறது. இந்த சாலை 60அடி அகலம் கொண்டதாகும். இச்சாலையை ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையை, ஆரம்பத்தில் ரயில்வே நிர்வாகம் பராமரிப்பில் இருந்து வந்தது. இதனால், சாலை முறையாக பாராமரிக்கப்பட்டது. பின்னர், 2011ம் ஆண்டுக்கு பிறகு, இச்சாலை, அப்போதைய ஆவடி நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், இந்த சாலையை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்த சாலை 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அப்போதைய நகராட்சி தலைவர் சா.மு.நாசர் முயற்சியால் இருபுறமும் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டு ரூ.2கோடி செலவில் செலவில் சீரமைக்கப்பட்டது. அதன்பிறகு, இச்சாலையை 8 ஆண்டுக்கு மேலாக பராமரிக்கப்படாமல் நகராட்சி நிர்வாகம் கைவிட்டது.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக கிடைக்கிறது. இதனால் பாதசாரிகள் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். சிறு மழை பெய்தால் கூட சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கும். இதன் காரணமாக, சாலை சேறும் சகதியுமாக மாறி பாதசாரிகள் நடமாட முடியாது. மேலும்,  பல்வேறு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு  60அடியாக இருந்த இச்சாலை தற்போது பல இடங்களில் 40அடியாக சுருங்கி விட்டது. மேலும், சில இடங்களில் சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கூட கட்டி வருகின்றனர். எனவே, ஆவடி மாநகாராட்சி அதிகாரிகள் அண்ணனூர் 60அடி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும்,  புதிதாக தார் சாலை அமைக்கவும் போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Bumpy ,Annanur ,