×

கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயிலில் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

நித்திரவிளை, மார்ச் 19: கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தூக்க திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. விழா நாட்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.  தூக்க நேர்ச்சையில் கலந்து கொள்ள 1092 குழந்தைகளின் பெயர் பதிவு  செய்யப்பட்டது.  நான்காம் நாள் திருவிழா முதல் தூக்க நேர்ச்சையில் கலந்து  கொள்ளும் குழந்தைகளின் குடும்பத்தினரும், ரதத்தில் குழந்தையை  வைத்திருக்கும் தூக்ககாரர்களும் விரதம் மேற்கொண்டு வந்தனர்.  கடைசி நாளான நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான குழந்தைகளுக்கான தூக்க  நேர்ச்சை நடந்தது. இதற்காக அதிகாலை வழக்கமான பூஜைகள் முடிந்து தூக்ககாரர்கள்  கோயில் வளாகத்தில் முட்டுகுத்தி நமஸ்காரத்தில் ஈடுபட்டனர், தொடர்ந்து  அம்மன் பச்சை பந்தலில் ஏழுந்தருள காலை 6.15 மணிக்கு   குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை ஆரம்பமானது.

முதலில் நான்கு அம்மன் தூக்கம் நடைபெற்றது. தொடர்ந்து குழந்தைகளுக்கான நேர்ச்சை தூக்கம்  நடைபெற்றது. பக்தர்கள் சரண கோஷத்துடன் ரதத்தை இழுத்து கோயிலை சுற்றி  வந்தனர். ரதமானது ஒரு தடவை கோயிலை சுற்றி வரும்  போது நான்கு நேர்ச்சை தூக்கம் முடிவுற்றது. ரதம், சராசரியாக ஒரு மணி நேரத்தில் பதினேழு முறை கோயிலை சுற்றி வந்தது. இதன்படி ஒவ்வொரு மணி நேரத்தில் 72 நேர்ச்சை தூக்கம்  முடிந்தது.  இரவிலும்  தூக்க நேர்ச்சை தொடர்ந்து  நடந்தது.  கோயில் வளாகத்தில் பக்தர்கள் தேவைக்கு  தற்காலிக மருத்துவமனை, குழந்தைகளின்  பெற்றோர்கள் அமருவதற்கான ஓய்வறைகள்  அமைக்கப்பட்டிருந்தது. குடிநீர், உணவு, உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கோயில் நிர்வாகம் தரப்பில்  செய்யப்பட்டிருந்தன.

அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் குளச்சல் ஏஎஸ்பி  விஷ்வேஷ் பி சாஸ்திரி தலைமையில் 200க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டிருந்தனர்.  நான்கு அம்மன் தூக்கம், 1092 குழந்தைகள் நேர்ச்சை தூக்கம், 30 எக்ஸ்டிரா தூக்கம் என மொத்தம் 1126 தூக்க நேர்ச்சை  முடிவடைய ரதமானது 382 முறை கோயிலை சுற்றி வரும். அதன்படி இன்று அதிகாலையில்  தான் தூக்கத்திருவிழா நிறைவு பெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு தலைவர் சதாசிவன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் சூரிய தேவன் தம்பி, துணைத் தலைவர் பிரேம்குமார், துணைச்  செயலாளர் பிஜு குமார், கமிட்டி உறுப்பினர்கள் விலோசனன், கிருஷ்ணகுமார்,  சந்திரசேகரன், சாம்பசிவன் நாயர், விஜயகுமார், சுசீந்திரன் நாயர், ஆகியோர்  செய்திருந்தனர்.

Tags : Bhadrakaliamman Temple ,Kollankodu ,
× RELATED நத்தம் மீனாட்சிபுரத்தில்...