×

கல்லூரி முதல்வரை தொடர்ந்து நாகர்கோவிலில் பள்ளி மாணவனுக்கு கொரோனா

நாகர்கோவில், மார்ச் 19: நாகர்கோவிலில் மேலும் ஒரு பள்ளி மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அந்த வகுப்பறையில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு 17,000 ஐ தாண்டி உள்ளது. கேரளாவில் தற்போது பாதிப்பு அதிகரித்துள்ளதால் குமரி - கேரள எல்லையோர பகுதிகள் சீல் வைக்கப்பட்டு அங்கிருந்து வருபவர்களிடம் சளி மாதிரி பரிசோதனை நடக்கிறது. நாகர்கோவில் மாநகரில் நாள் ஒன்றுக்கு சுமார் 600 பேரிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றின் முதல்வருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, அந்த கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்கள், பேராசிரியர்கள், முதல்வர் அறைக்கு வந்து சென்ற மாணவர்கள் என 54 பேரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வேறு யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானது. மேலும் 120 பேரிடம் சளி மாதிரி எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மாணவனின் தந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து, மாணவன் மற்றும் வீட்டில் உள்ளவர்களுக்கு நடந்த சோதனையில் மாணவனுக்கு மட்டும் உறுதியானது. இதையடுத்து மாணவன், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளான். தற்போது மாணவனின் வகுப்பறையில் உள்ள மாணவர்கள் 35 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. வகுப்பறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பூட்டப்பட்டுள்ளது.  இதற்கிடையே முக கவசம் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். மாநகர சுகாதார ஆய்வாளர்கள் 2 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு அபராதம் விதிக்கிறார்கள். நாகர்கோவிலில்  ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்துக்கு கொரோனா விதிமுறை கடைபிடிக்காத காரணத்தால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதே போல் நாகர்கோவிலில் உள்ள மகளிர் கல்லூரியில் நடந்த சோதனையில், கொரோனா விதிமுறை பின்பற்றாமல் மாணவிகள் அமர வைக்கப்பட்டனர். இதையடுத்து அந்த கல்லூரிக்கும் அபராதம் விதித்துள்ளனர்.

Tags : Corona ,Nagercoil ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...