×

நாகர்கோவிலில் அரசு நர்சிங், சட்டக் கல்லூரி ெகாண்டு வருவேன்

நாகர்கோவில், ஏப்.19: நாகர்கோவிலில் அரசு சட்டக்கல்லூரி, நர்சிங் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என வேட்பு மனு தாக்கல் செய்த பின், பா.ஜ. வேட்பாளர் எம்.ஆர்.காந்தி கூறினார்.  நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ. வேட்பாளர் எம்.ஆர்.காந்தி, நேற்று மதியம் தொகுதி தேர்தல் அலுவலரான ஆர்.டி.ஓ. மயிலிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ. வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன், அதிமுக மாவட்ட செயலாளர் அசோகன் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

 வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு எம்.ஆர்.காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறேன். நிச்சயமாக அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். நான் வெற்றி பெற்றதும், குமரி மாவட்ட மக்களின் கோரிக்கை மட்டுமல்ல, என்னுடைய நீண்ட கால திட்டமான நாகர்கோவிலில் சட்டக்கல்லூரி, நர்சிங் கல்லூரி கொண்டு வருவேன். மத்திய, மாநில அரசோடு இணைந்து தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார்.

முன்னதாக மதியம் 12.10 மணியளவில் எம்.ஆர்.காந்தி உள்ளிட்டோர், வேட்பு மனு தாக்கலுக்கு வந்தனர். அந்த சமயத்தில் திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன் வேட்பு மனு தாக்கலுக்காக அலுவலகத்துக்கு உள்ளே அமர்ந்து இருந்தார். ஏற்கனவே இரு சுயேட்சகளும் காத்திருந்தனர். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே நேரத்தில் வந்தால், டோக்கன் முறை வினியோகம் செய்ய வேண்டும் என்ற விதி காரணமாக, எம்.ஆர்.காந்திக்கும் 6ம் நம்பர் டோக்கன் கொடுக்கப்பட்டது. 2 சுயேட்சைகளுக்கு 4, 5 நம்பர் டோக்கன் கொடுத்திருந்தனர். ஆனால் பிரசாரத்துக்கு செல்ல வேண்டும் என்பதால், எம்.ஆர்.காந்தியை உள்ளே அனுமதிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து எம்.ஆர்.காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலுக்காக பா.ஜ. கட்சி அலுவலகத்தில் இருந்து அவர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். குளச்சல் தொகுதி:  குளச்சல்  சட்டமன்ற தொகுதி பா.ஜ.வேட்பாளர் குமரி ப.ரமேஷ் குருந்தன்கோடு வட்டார  வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல  அலுவலர் நாகராஜனிடம் வேட்பு மனு தாக்கல்  செய்தார்.குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் எஸ்.ஏ.அசோகன்,குளச்சல்  தொகுதி பா.ஜ.பொறுப்பாளர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
விளவங்கோடு தொகுதி: விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பாஜ வேட்பாளராக ஜெயசீலன் போட்டியிடுகிறார். அவர் நேற்று விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் மாதவனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் மாவட்ட பா.ஜ தலைவர் தர்மராஜ், அதிமுக  நிர்வாகி நாஞ்சில் டொமினிக் வந்தனர்.

Tags : Government Nursing and Law College ,Nagercoil ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...