×

ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் முத்துசாமி வேட்புமனு தாக்கல்

ஈரோடு,மார்ச்19: ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளரான தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி நேற்று தனது வேட்புமனுவை ஈரோடு கோட்டாட்சியர் சைபுதீனிடம் தாக்கல் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, திமுக எதிர்கட்சியாக உள்ள போதிலும் கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பிரச்னைகளை தீர்க்க தீவிரமாக பணியாற்றி வருகின்றோம்.  பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தீர்வு காணப்படும். பொதுமக்கள் எப்போது மனுக்கள் கொடுத்தாலும் அதை பெற்று தலைமையிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  தேர்தல் அறிக்கையில் பெண்கள் பயன்பெறும் வகையில் நிறைய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. சிலிண்டர் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, ரேசன் கடைகள் மூலம் கொரோனா நிவாரணம் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்திற்கு என்று தனியாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்து அதிமுக வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில் திமுக சார்பில் ஈரோட்டில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்களுக்கு பணியாற்றியதற்காக என் மீது 15 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்று மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். இவ்வாறு முத்துசாமி கூறினார். ஈரோடு மேற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் சு.முத்துசாமி அளித்துள்ள அபிடவிட்டில் தெரிவித்துள்ள சொத்துக்கள் விவரம்: அவரது பெயரில் ரூ.79 லட்சத்து 91ஆயிரத்து 076 அசையும் சொத்தும், ரூ.4கோடியே 26லட்சத்து 80ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்தும், அவரது மகன் பெயரில் ரூ.77லட்சத்து 71ஆயிரத்து 264 மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.4 கோடியே 64லட்சத்து 20ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாகவும், கடன் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Tags : Erode ,West ,DMK ,Muthusamy ,
× RELATED ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தளவு வாக்குப்பதிவு