×

விருத்தாசலத்தில் பிரேமலதா வேட்பு மனு தாக்கல்

விருத்தாசலம், மார்ச் 19: விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் தேதிமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று ேவட்பு மனு தாக்கல் செய்தார்.அதிமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. இந்த கூட்டணியில் 60 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் விஜயகாந்த், துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் களம் இறங்கி உள்ளார். நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.  விருத்தாசலம் சப் கலெக்டர் பிரவீன்குமாரிடம் அவர் வேட்பு மனுவை அளித்தார். அவருடன் எல்.கே.சுதீஷ், மாவட்ட தேமுதிக செயலாளர் சிவக்கொழுந்து, அமமுக மாவட்ட செயலாளர் பாலமுருகன், தொகுதி பொறுப்பாளர் ஏ.பி.ராஜ் ஆகியோர் சென்றிருந்தனர்.

வேட்பு மனு தாக்கலுக்கு பின்னர், பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2006ல் விஜயகாந்த் வெற்றி  பெற்ற இந்த தொகுதியில் 2021 ல் நான் போட்டியிடுகிறேன். விஜயகாந்துக்கும்  தேமுதிகவுக்கும் முதல் வெற்றியை தந்தது விருத்தாசலம் தொகுதி. 16 ஆண்டு  காலம் நான் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வந்தேன். முதல்முறையாக  இந்த  முறை நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். தமிழ்நாட்டின் கடன் அதிகமாகிக்  கொண்டே செல்கிறது. வேலைவாய்ப்பு, மக்களுக்கு தேவையான இருப்பிடம், கல்வி,  இலவச மருத்துவம் வழங்குவதை விட்டு விட்டு பொருட்களை இலவசமாக கொடுத்து  மக்களை ஏமாற்றுவது சரியல்ல. 234 தொகுதிகளிலும் எங்கள் கட்சி மிகவும் பலமான  ஒரு கட்சியாகத்தான் உள்ளது. அதிலும் கிராமங்கள் முழுவதும் கிளைக் கழகங்கள்  இருக்கும் ஒரு மாபெரும் கட்சியாக தேமுதிக உள்ளது. மே 2ம் தேதி எங்களுடைய பலம்  என்னவென்று எல்லோருக்கும் தெரியவரும் என்றார். முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் கொளஞ்சியப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்து பிராது சீட்டு கட்டினார்.

பிரேமலதா விஜயகாந்த் சொத்து விவரம் பிரேமலதாவின் பெயரில் அசையும் சொத்தாக ரூ. 5.98 கோடியும், அசையா சொத்தாக 32.8 கோடியும் கடன் ரூ. 8.15 கோடியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேமலதா கணவர் விஜயகாந்த் பெயரில் அசையும் சொத்து ரூ.6.94 கோடியும் அசையா சொத்தாக ரூ. 41.55 கோடியும், கடன் ரூ.8.15 கோடியும் உள்ளதாகவும் தேர்தல் துறையிடம் அளிக்கப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Premalatha ,Vriddhachalam ,
× RELATED அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து...