×

பட்டிப்புலம் ஊராட்சியில் அவலம் 10 ஆண்டுகளாக சீரமைக்காத சிமென்ட் சாலை: குண்டும், குழியுமாகி நடந்து செல்ல முடியாத அவலம்

மாமல்லபுரம், மார்ச் 18: பட்டிப்புலம் ஊராட்சியில், 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமென்ட் சாலை படுமோசமாக சேதமடைந்துள்ளது. இதனை, சீரமைத்துத்தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் இசிஆர் சாலையையொட்டி பட்டிப்புலம் ஊராட்சி உள்ளது. இங்குள்ள, அறிஞர் அண்ணா தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த தெருவில், கடந்த 10 ஆண்டுக்கு முன்பு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இதனை, ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காமல்விட்டதால், சிமென்ட் சாலை முழுவதும் சேதமடைந்து மண் சாலையாக காட்சி தருகிறது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என ஊராட்சி செயலாளருக்கு பலமுறை கோரிக்கை வைத்தும், நேரில் சென்று புகார் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, இந்த சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் முதியவர்கள், சிறுவர்கள் நடந்து செல்லும்போது கீழே விழுந்து காயமடைகின்றனர். பைக்கில் செல்பவர்களும், நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அறிஞர் அண்ணா தெருவில் 10 ஆண்டுக்கு முன் சிமென்ட் சாலை போடப்பட்டது. இதனை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் விட்டதால், அது மண் சாலையாக மாறி உள்ளது. இந்த மண் சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் கடுமையாக அவதிப்படுகிறோம். இச்சாலையை சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இசிஆர் சாலையில் போராட்டம் நடத்துவோம். அப்போதும் எங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால், இதன் எதிரொலியை வரும் சட்டமன்ற தேர்தலில், பார்க்க நேரிடும் என எச்சரிக்கை விடும்படி கூறினர்.

Tags : Pattipulam Panchayat Cement road ,
× RELATED காஞ்சி சங்கரா பல்கலைக்கழகத்தில் வேதபாடசாலை மாணவர்கள் ஆய்வு