×

திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் பாமக, விசிக, மநீம, அமமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

திருப்போரூர், மார்ச் 18: திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜி போட்டியிடுகிறார். இதையொட்டி அவர், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன், திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மதிமுக மாவட்ட செயலாளர் பார்த்தீபன், திருப்போரூர் ஒன்றிய செயலாளர்கள் லோகு, சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை தலைவர் ஜெகதீசன் ஆகியோருடன் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். பிறகு, பெரியார், அண்ணா, அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து, தேர்தல் அலுவலர் சுப்பிரமணியனிடம் வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில் \”தமிழ்நாடு முழுவதும் திமுக ஆதரவு அலை வீசுகிறது. இந்த தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெறுவது உறுதி. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக அமர்ந்து, திருப்போரூர் தொகுதியில் மக்கள் கோரிக்கை வைத்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தர உழைப்பேன் என்றார். அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் குமரவேல், நந்தகுமார், பாஜ, புரட்சிபாரதம் ஆகிய கட்சி நிர்வாகிகளுடன் சென்று எம்ஜிஆர், அண்ணா, பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். பின்னர், மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக சென்றனர்.

அப்போது,   வட்டாட்சியர் அலுவலகம் அருகே போலீசார் தடுப்பு வைத்து  நிறுத்தி, வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்க முடியும் என கூறி அனைவரையும் ஓரமாக நிறுத்தினர்.  இதனால், அதிமுகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த கூட்டத்தை அப்புறப்படுத்த போலீசார் முயற்சித்தனர். இதனால், போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு பரபரப்பு உருவானது. இதேபோல் அமமுக மற்றும் தேமுதிக கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் கோதண்டபாணி தேர்தல் அலுவலர் சுப்பிரமணியனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் அமமுக ஒன்றிய செயலாளர் முனுசாமி, தேமுதிக ஒன்றிய செயலாளர் கோபிநாத் ஆகியோர் இருந்தனர்.

3 டிஎஸ்பி தலைமையில் பாதுகாப்பு
நேற்று ஒரே நாளில் விசிக, பாமக, அமமுக, மநீம வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். அவர்களுடன் மாற்று வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர். ஒரேநாளில் பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வந்ததாலும், அவர்களுடன் கூட்டணிக் கட்சியினரும் திரண்டு வந்ததாலும் திருப்போரூர் பஸ் நிலையம், ரவுண்டானா, வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஓஎம்ஆர் சாலை உள்பட அனைத்து பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை சமாளிக்க 3 டிஎஸ்பிக்கள், 6 இன்ஸ்பெக்டர்கள், 20 எஸ்ஐக்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். செங்கல்பட்டு எஸ்பி சுந்தரவதனன், போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

Tags : Pamaka ,Vizika ,Manima ,AIADMK ,Thiruporur assembly constituency ,
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்