×

திருவேற்காடு நகராட்சியில் மாஸ்க் அணியாவிட்டால் ₹200 அபராதம்

பூந்தமல்லி, மார்ச் 18: திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாஸ்க் அணியாமல் வந்தால் ₹200 அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் வசந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிவருவதால் பொது இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, திருவேற்காடு நகராட்சிப் பகுதிகளில் கொரோனா பரவாமல் தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும். மேலும் கூட்டநெரிசல் சேராமல் பார்த்து கொள்ள வேண்டும். கட்டாயம் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், கைகளை குறிப்பிட்ட இடைவெளியில் சோப்பு போட்டு  கழுவவேண்டும். கொரோனா தடுப்பூசி தேவைப்படுவர்களை கண்டறிந்து தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு ₹200 அபராதம் விதிக்கப்படும். கடைகள், உணவு விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் ₹5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ஆட்டோக்கள், பேருந்துகள், வேன்களில் பயணம் செய்யும் பயணிகள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். கொரோனா அறிகுறி இருப்பவர்கள் அதற்காக அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள், நகராட்சி சுகாதாரப்பிரிவை தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் உடனிருந்தார்.

Tags : Thiruverkadu municipality ,
× RELATED திருவேற்காடு நகராட்சி சார்பில் திட,...