×

ஆவடி சி.டி.எச் சாலையில் எரியாத மின்விளக்குகள்

ஆவடி, மார்ச் 18: ஆவடி பகுதியில், சி.டி.எச் சாலையில் மின் விளக்குகள் பல இடங்களில் எரியாததால் சாலை இருளில் மூழ்கி உள்ளது.
சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் வழியாக சி.டி.எச் சாலை செல்கிறது. இச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சென்னை புறநகர், திருவள்ளூர் பகுதியில் உள்ள கலை, பொறியியல் கல்லூரிக்கும் ஏராளமான மாணவர்கள் கல்லூரி பேருந்துகளில் சென்று வருகின்றனர். இச்சாலை காலை முதல் இரவு வரை பரபரப்பாக காணப்படும். இச்சாலையின் மையப்பகுதியில், ஆவடி மாநகராட்சி எல்லையான திருமுல்லைவாயல் முதல் பட்டாபிராம் வரை மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

 இந்த விளக்குகளின்  வெளிச்சம் மூலம் இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், கனரக வாகனங்கள் எளிதாக சென்று வருகிறது. இந்த விளக்குகள் ஆரம்பத்தில் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன. சில இடங்களில் மட்டுமே விளக்குகள் எரிகின்றன. குறிப்பாக திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகர், ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் பல மின்விளக்குகள் எரிவது இல்லை. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்பட்டு சென்று வருகின்றனர்.  இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆவடி, திருமுல்லைவாயல்,  பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் மையப் பகுதியில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால், அப்பகுதிகளில் உள்ள சாலை இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.

இதன் காரணமாக, பாதசாரிகள் சாலை ஓரங்களில் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சாலை ஓரங்களில் பாதசாரிகள் செல்வது தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக வந்து மோதி விடுகின்றனர். இதனால் அவர்கள் படுகாயம் அடைகின்றனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளும் கீழேவிழுந்து காயமடைகின்றனர்.  இருளை பயன்படுத்தி சாலை ஓரம் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, சில்மிஷம் உள்ளிட்ட செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.   சி.டி.எச் - வைஷ்ணவி நகர் சந்திப்பில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தில் நான்கு விளக்குகளில், இரண்டு மட்டுமே பல மாதங்களாக எரிக்கின்றன. இதனால், அங்குள்ள சாலை  இருள்சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதியில் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், இரவு நேரங்களில் கடைகள் உள்ள வெளிச்சத்தில்தான் பொதுமக்கள் சாலையை கடக்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை ஆவடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் செய்தும் பலனில்லை. ஆவடி பகுதியில் உள்ள சி.டி.எச் சாலையில் பல இடங்களில் எரியாமல் கிடக்கும் மின் விளக்குகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Avadi CDH Road ,
× RELATED ஆவடி ரயில் நிலையத்தில் ரூ.1.5 கோடி...