×

ஆவடி மாநகராட்சியில் தெருவில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்

ஆவடி, மார்ச் 18: ஆவடி மாநகராட்சி 18வது வார்டு சின்னம்மன் கோயில் பிரதான சாலையில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த  பகுதியில் பல ஆண்டுக்கு மேலாக சாலை ஓரமாக  குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இந்த குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களாக சரிவர அப்புறப்படுத்துவது இல்லை. இதன்காரணமாக, இந்த தெருவில் குப்பைகள் குவிந்து கிடந்தன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகி வந்தனர்.  மேலும், அந்த குப்பைகள் காற்றில் பறந்து சாலைகளில் சிதறி கிடப்பது மட்டும் அல்லாமல் வேகமாக வாகனங்கள் செல்லும்போது குப்பைகள் காற்றில் பறந்து கடைகள், வீடுகளுக்குள் விழுந்தன. சாலை, தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசின. இதனால் பாதசாரிகள் மூக்கை பொத்தி கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் புகைப்படத்துடன்  செய்தி வெளியானது. இந்த செய்தி மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து, அதிகாரிகள் ஆவடி, சின்னம்மன் கோயில் பிரதான சாலையில் உள்ள குப்பைகளை ஊழியர்கள் மூலமாக உடனடியாக அகற்றினர். இதனால், அப்பகுதி பொதுமக்கள் குப்பைகளை அகற்றிய அதிகாரிகளுக்கும், உதவியாக இருந்த தினகரன் நாளிதழுக்கும் நன்றியை தெரிவித்தனர்.

Tags : Avadi Corporation ,
× RELATED ஆவடி மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்: 47 தீர்மானங்கள் நிறைவேற்றம்