×

பெரம்பலூர் கலெக்டர் எச்சரிக்கை ஆலத்தூர் தாலுகா பகுதி கிராமங்களில் காமன் பண்டிகை விழா

பாடாலூர்,மார்ச் 18: ஆலத்தூர் தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் காமாண்டி நடும் விழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் காமன் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். மாசிமாத அமாவாசை நாளிலிருந்து 3,5,7, என்ற நாள்களில் காமாண்டி நடுவார்கள். கரும்பு, வைக்கோல், தெப்பப்பில், ஆமணக்குமரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு வைக்கோல் பிரியால் சுற்றி அதை அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் தூக்கி வரச் செய்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வருவர். பின்னர் அந்த காமாண்டியை கிராமத்தில் உள்ள தெருக்களில் முக்கிய இடத்தில் ஆண்டுதோறும் வழக்கமாக நடப்படும் இடத்தில் குழிதோண்டி நவதானியங்கள் இட்டு சிறப்பு பூஜைகள் செய்து நடப்படும். இதுபோல் நடப்பாண்டு ஆலத்தூர் தாலுகா பகுதியில் உள்ள செட்டிகுளம், பாடாலூர் நாட்டார்மங்கலம், நாரணமங்கலம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் காமாண்டி நடப்பட்டது.

இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அதன் அருகில் முளைப்பாரி நாற்று விட்டு சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர். இந்த காமாண்டிக்கு தொடர்ந்து 16 நாட்களுக்கு நாள்தோறும் இரவில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும். நிறைவு நாளன்று காமன் சுவாமிக்கு சிறப்பாக வழிப்பட தெருக்கூத்து நாடகம் நடக்கும். இதில் திருமணமாகாத ஆண்கள் மன்மதன், ரதி வேடமிட்டு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக நடனமாடி ஊர்வலமாக வந்த பின்னர் காமாண்டி முன் நடனமாடும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் காமாண்டியானது தீயிட்டு கொளுத்தி அதிலிருந்து பெறப்படும் சாம்பலை பக்தர்கள் நெற்றியில் திருநீரூட்டு வீட்டுக்கு எடுத்துச் செல்வர். திருமணமாகாதவர்கள் மன்மதன்,ரதி வேடமிட்டு ஆடி வந்தால் உடனடியாக திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். கிராமப்புற பகுதிகளில் காலம் காலமாக நடைபெற்று வரும் இந்த காமண் பண்டிகை தற்போதைய கால வளர்ச்சியிலும் கணினி யுகத்திலும் பழமை மாறாமல் நடைபெற்று வருவது சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.

Tags : Perambalur Collector Warning Common festival ,Alathur taluka ,
× RELATED நாட்டார்மங்கலத்தில் மாரியம்மன் வீதி உலா