×

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 33 பேர் வேட்புமனு தாக்கல்

புதுக்கோட்டை, மார்ச் 18: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதையொட்டி நேற்று 4வது நாளாக வேட்புமனு தாக்கல் நடந்தது. அதன்படி புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக டாக்டர் முத்துராஜா தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் டெய்சிகுமாரிடம் அளித்தார். அவருடன் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் பெரியண்ணன் அரசு உடனிருந்தனர். திமுக மாற்று வேட்பாளராக முத்துராஜாவின் மனைவி ராஜகுமாரி வேட்புமனு அளித்தார்.

அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக கார்த்திக் தொண்டைமான் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் டெய்சிகுமாரிடம் அளித்தார். அவருடன் நகர அதிமுக செயலர் பாஸ்கர், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சேட் ஆகியோரும் உடனிருந்தனர். அதிமுக மாற்று வேட்பாளராக நகர அதிமுக செயலாளர் பாஸ்கர் வேட்புமனு அளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுவதற்காக மூர்த்தி தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் டெய்சிகுமாரிடம் அளித்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக கருப்பையா வேட்புமனு தாக்கல் செய்தார். மொத்தத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மட்டும் நேற்று 6 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை இந்த தொகுதியில் மட்டும் 8 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதியிலும் நேற்று ஒரே நாளில் 33 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திருமயம்: திருமயம் சட்டமன்ற தொகுதியை முக்கிய கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுவை  தாலுகா அலுவலகத்தில் தாக்கல் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் சிவராமன், வீரமுத்தரையர் முன்னேற்ற கழகம் சார்பில் செல்வகுமார், சுயேட்சையாக பொன்னமராவதி ஒன்றிய முன்னாள் அதிமுக சேர்மன் அழகு சுப்பையா, வெங்கடேசன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அறந்தாங்கி: அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று அதிமுக வேட்பாளர் ராஜநாயகம்,  மாற்று வேட்பாளர் ராஜேஸ்வரி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹுமாயுன்கபீர், மாற்று வேட்பாளர் முகமதுஇப்ராகிம், சுயேட்சை வேட்பாளர் வேல்ராஜ் ஆகியோர் அறந்தாங்கி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அறந்தாங்கி சப் கலெக்டருமான ஆனந்த்மோகனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வேட்புமனு தாக்கல்: இலுப்பூர் ஆர்டிஓ அலுவலகத்தில் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் விஜயபாஸ்கர் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் பாலதண்டாயுதபாணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் தனக்கு அசையும் சொத்தாக ரூ.29 கோடியே 77 லட்சத்து 3,890 உள்ளது, அசையா சொத்தாக ரூ.7 கோடியே 94 லட்சத்து 7,984 உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது தனக்கு அசையும் சொத்தாக ரூ.3 கோடியே 52 லட்சத்து 81,094 உள்ளதாகவும், அசையா சொத்தாக ரூ.1 கோடியே 55 ஆயிரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : Pudukkottai district ,
× RELATED கறம்பக்குடி அருகே இயந்திரம் வாயிலாக கோடை நடவு பணிகள் தீவிரம்