×

முத்துப்பேட்டையில் சாலை பணி பாதியில் நிறுத்தம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

முத்துப்பேட்டை, மார்ச் 18: முத்துப்பேட்டையில் சாலை பணியை நிறுத்திய பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்து டிஜிட்டல் போர்டு வைத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பக்கிரிவாடி தெரு, காசிம் தோட்டம் சாலை பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பேரூராட்சி சார்பில் முறையான சாலை, குடிநீர், தெரு விளக்கு, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்டை வசதிகள் ஏதும் இதுநாள் வரை பேரூராட்சி சார்பில் செய்து கொடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மழை காலங்களில் சாலைகளில் செல்ல முடியாதளவிற்கு சேரும் சகதியுமாக காட்சி அளிப்பதுடன், அவசரத்திற்கு வாகனங்கள், ஆபத்தான நேரத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாபடி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக இப்பகுதிக்கு புதிய தார் சாலை அமைத்து தரவேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து சமீபத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வேறு பகுதியில் உள்ள ஒரு சாலைக்கும், இந்த பக்கிரிவாடி காசிம் தோட்டம் இணைப்பு சாலைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த வாரம் பணிகள் துவங்கியது.

பணி துவங்கிய அடுத்தநாளே பேரூராட்சி நிர்வாகம் இந்த சாலை தனியார் ஒருவருக்கு சொந்தமானது என்று கூறி ஒரு தரப்பினர் புகார் மனு அளித்துள்ளதாக கூறி திடீரென்று பணியை நிறுத்தினர். இதனால் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறாமல் கிடப்பில் போடபட்டது. இது சம்பந்தமாக பலமுறை அதிகாரிகளை இப்பகுதி மக்கள் தொடர்பு கொண்டு கேட்டும் முறையான பதில் இல்லை. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக நேற்று முடிவு செய்தனர். அதன்படி இந்த குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை துவங்கும் இடத்தில் (பட்டுக்கோட்டை சாலை அருகே) தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக கூறி ஒரு விளம்பர டிஜிட்டல் போர்டு வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இது குறித்து அப்பகுதியை சேர்ந்த கருத்தப்பா என்பவர் கூறுகையில், சாலை பணியை முறையான காரணமின்றி நிறுத்திய பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்த தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்தோம். இதற்கும் அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக வீட்டுக்கு வீடு போர்டு வைப்போம். பின்னர் வீட்டில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.

Tags : Muthupet ,
× RELATED முத்துப்பேட்டை அருகே...