மன்னார்குடி அருகே பனை மரங்களை வெட்டி கடத்திய லாரி பறிமுதல்

மன்னார்குடி, மார்ச் 18: மன்னார்குடி அருகே துணைக்கட்டளை கிராமத்தில் இருந்து கோரையாற்றுக்கு செல்லும் வழியில் அங்குள்ள ஓடைக்கரை பகுதியில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு இடத்தில் ஏராளமான பனை மரங்கள் உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் அப்பகுதியில் உள்ள 50 உயிர் பனை மரங்களை உரிய அனுமதியின்றி வெட்டி இயந்திரங்கள் மூலம் துண்டுகள் போட்டு லாரியில் கடத்த முயற்சிப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது. இதன் பேரில் ஆர்ஐ மாதவராஜ், விஏஓ சாந்தி மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதிகாரிகள் வருவதை கண்ட மர்ம நபர்கள் லாரியை நிறுத்திவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.இது பற்றி மன்னார்குடி நகர காவல் நிலையத்திற்கு வருவாய்த்துறையினர் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் டவுன் எஸ்ஐ முருகன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பனைமரங்கள் ஏற்றப்பட்ட லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து விஏஓ சாந்தி கொடுத்த புகாரின் பேரில் ஆர்டிஓ அழகர்சாமி விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>