×

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டத்தில் 60 வயதுக்கு மேல் 10 வயதிற்குட்பட்டவர்கள் பங்கேற்க தடை

திருவாரூர், மார்ச் 18: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 10 வயதிற்குட்பட்டவர்களும் கலந்துகொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் இருந்து வருகிறது. கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் உள்ளனர். இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. மேலும் கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கொரோனோ காரணமாக கடந்தாண்டு நடைபெற வேண்டிய தேரோட்டம் மற்றும் தெப்ப திருவிழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனோவின் தாக்கம் குறைந்துள்ளதால் நடப்பாண்டில் இந்த ஆழித்தேரோட்ட விழாவினை நடத்துவதற்கு அறநிலையதுறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஜன.28ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்ற நிலையில் விழா துவக்கத்திற்காக கொடியேற்றும் நிகழ்ச்சியானது கடந்த 2ம் தேதி நடந்தது. இந்நிலையில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக தியாகராஜருக்கு உகந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் வரும் 25ம் தேதி காலை 7.30 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் குறைந்த நாட்களே இருப்பதால் ஆழித்தேர் கட்டுமான பணி மற்றும் தேரில் விட்டவாசல் வழியாக தியாகராஜர் எழுந்தருளுவதற்கு பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த ஆழித்தேரோட்ட விழாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 10 வயதிற்குட்பட்டவர்களும் கலந்துகொள்ள மாவட்ட நிர்வாகம் நேற்று தடைவிதித்து உத்தரவிட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இது குறித்து பக்தர் ஒருவர் கூறுகையில், திருவாரூர் ஆழித்தேர் என்பது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேராகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெற்று வந்த இந்த ஆழித்தேரோட்டம் கடந்த 1927ம் ஆண்டு தேரோட்டத்தின் போது ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக தேர் முற்றிலுமாக எரிந்தது. பின்னர் 1930ல் புதிய தேர் உருவாக்கப்பட்டு 1948 வரையில் நடைபெற்ற நிலையில் பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த தேரோட்டம் என்பது முற்றிலுமாக தடைப்பட்டது. அதன் பின்னர் வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் பெரும் முயற்சி காரணமாக 1970ல் முதல்வர் பொறுப்பேற்ற மறைந்த கருணாநிதி 22 ஆண்டு காலமாக ஓடாத தேரை ஓட்டி காண்பித்தார். பின்னர் தொடர்ந்து இந்த தேரோட்டமானது நடைபெற்றாலும் தியாகராஜருக்கு உகந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் தான் தேரோட்டம் நடத்த வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதன்படி கடந்த 1990, 91 மற்றும் 1993ம் ஆண்டில் இதுபோன்று ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெற்ற நிலையில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் வரும் 25ம் தேதி ஆயில்ய நட்சத்திரத்தன்று காலை 7.30 மணியளவில் இந்த ஆழித்தேரோட்டத்தை நடத்துவதற்கு அறநிலைய துறை முடிவு செய்துள்ளது.இந்நிலையில் கடந்தாண்டு கொரோனா காரணமாக இந்த ஆழித்தேரோட்டம் நடைபெறாத நிலையில் இந்த வருடம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறுவதையொட்டி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் இதுபோன்று மாவட்ட நிர்வாகத்தின் தடை என்பது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது 8வது வரையில் பள்ளி விடுமுறை என்ற நிலையில் தங்களது குழந்தைகளுடன் இந்த விழாவில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். மேலும் அரசியல் கூட்டங்களில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொள்ளும் நிலையில் இந்த தேரோட்டத்தில் மட்டும் கொரானோ பரவ வாய்ப்பு என்று தெரிவித்திருப்பது திட்டமிட்ட சதியாக உள்ளது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : Thiruvarur Thiyagaraja Swamy Temple ,
× RELATED திருவாரூர் தியாகராஜர் சுவாமி...