×

அரசு பள்ளி மாணவி மாநில அளவில் 2ம் இடம் பிடித்து அசத்தல் ஊரக திறனாய்வு தேர்வில்

திருவலம், மார்ச் 18: திருவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி என்.அபிநயா தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்று பெண்கள் பிரிவில் மாநில அளவில் 2ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து அசத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தாங்கள் பயிலும் பாடப்பிரிவுகளில் இருந்து தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி நடந்தது. இத்தேர்வில் வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா திருவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பில் பயிலும் 8 மாணவிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் தேர்விற்கான முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது. இத்தேர்வு எழுதியவர்களில் 3,397 பேர் தேர்ச்சி அடைந்தனர். இதில் திருவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி என்.அபிநயா 80 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்து பெண்கள் பிரிவில் மாநில அளவில் 2ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து அசத்தியுள்ளார். மேலும் வெற்றி பெற்ற மாணவிக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் கல்வி பயில வருடத்திற்கு ₹1,000 சிறப்பு கல்வி உதவி தொகையாக வழங்கப்படவுள்ளது. இதையடுத்து வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவிகள் பாராட்டினர்.

Tags :
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்