×

கோவிட் விதிமுறைகளை பின்பற்றாமல் விருதுநகரில் தேர்தல் அலுவலர்கள் 11,376 பேருக்கு முதல்கட்ட பயிற்சி கொரோனா தீயாய் பரவும் அபாயம்

விருதுநகர், மார்ச் 18: விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் 340, திருவில்லிபுத்தூர் 357, சிவகாசி 368, சாத்தூர் 351, விருதுநகர் 325, அருப்புக்கோட்டை 311, திருச்சுழி 318 என 7 சட்டமன்ற தொகுதிகளில் 2,370 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்கள் 11,376 பேருக்கு நேற்று முதல்கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. ராஜபாளையம் தொகுதி அலுவலர்களுக்கு பி.ஏ.சி.எம். மெட்ரிக்குலேசன் பள்ளி, திருவில்லிபுத்தூர் தொகுதி வி.பி.எம்.எம்.நர்சிங் கல்லூரி, சாத்தூர் தொகுதி எஸ்.ஆர்.நாயுடு கல்லூரி, சிவகாசி தொகுதி எஸ்.எப்.ஆர்.கல்லூரி, விருதுநகர் தொகுதி கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை தொகுதி தேவாங்கர் கலைக்கல்லூரி, திருச்சுழி தொகுதி சி.இ.ஓ.எ. கல்லூரியில் பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், விருதுநகர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 தொகுதிகளில் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்க ஏற்பாடுகள் செய்யவில்லை. விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி 9.30 மணிக்கு துவங்கி வகுப்பிற்கு 11 மணி வரை அலுவலர்கள் வந்தனர். ஒரு வகுப்பறையில் 40க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இட நெருக்கடியுடன் அமர வைக்கப்பட்டிருந்தனர். அத்துடன் பயிற்சி வகுப்பிற்கு வந்த ஆசிரியர்களுக்கு கிருமி நாசினி வழங்கவில்லை, பலர் முகக்கவசம் அணியாமல் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர். இதனால் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அலுவலர்களுக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Tags : corona fire ,
× RELATED சமூக இடைவெளி இல்லாமல்...