அரசு மருத்துவமனையில் டாக்டர் தகாத வார்த்தையில் பேசியதாக வழக்கு போலீஸ் உதவி கமிஷனர் விசாரித்து அறிக்கையளிக்க உத்தரவு

மதுரை, மார்ச் 18: மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர் தகாத வார்த்தையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் உதவி கமிஷனர் அறிக்கையளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்த வக்கீல் ஹேமராஜ், மதுரை ஜேஎம் 6வது நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக என் மாமா செல்வகுமார் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 3ம் தேதி அவரை பார்க்க சென்றேன். அங்கு பணியில் இருந்த டாக்டர் ஒருவர் உள்நோயாளிகளை தரக்குறைவாகவும், ஏளமனாகவும் பேசினார். எனது மாமாவை பார்த்து ஓசி சோறு தின்று இங்கேயே இருந்து விடலாம் என நினைக்கிறாயா எனக்கூறி தகாத வார்த்தைகளில் திட்டினார். தட்டிக்கேட்ட என்னையும் தரக்குறைவாக பேசி என்னை தள்ளி விட்டார். இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் சமரசமாக செல்லுமாறு கூறி வழக்குபதிவு செய்ய மறுத்தனர். எனவே என் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் முத்துராமன், மனுதாரர் புகார் குறித்து மதுரை அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் பாரபட்சம் இன்றி விரைவாக விசாரித்து  விரிவான அறிக்கையை மார்ச் 26ல் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டார்.

Related Stories:

>