மதுரை மத்திய சிறையில் இருந்து அவசர விடுமுறையில் சென்ற ஆயுள் கைதி மாயம்

மதுரை, மார்ச் 18: மதுரை மத்திய சிறையிலிருந்து அவசர கால விடுமுறையில் சென்ற கைதி மாயமானதால், போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர். மதுரை பீ.பீ.குளம் மருதுபாண்டியர் நகர், முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி. இவர் ஒரு வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில், அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கைதிகள் அவசர கால விடுமுறை சட்ட விதியின் கீழ், பால்பாண்டி கடந்த மார்ச் 15ம் தேதி விடுமுறை கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதிகாரிகள் பரிசீலனை செய்து, அவருக்கு விடுமுறை அளித்தனர். ஆனால், அவர் விடுமுறை முடிந்த பின்னர் சிறைக்கு திரும்பி வரவில்லை.

இதுகுறித்து சிறை துறையிலிருந்து, தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. போலீசார், பால்பாண்டியின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது, பால்பாண்டி வீட்டிற்கு வரவில்லை என்று தெரியவந்தது. போலீசார் பல இடங்களில் தேடியும் பால்பாண்டி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மதுரை மத்திய சிறை அலுவலர் வசந்தா, தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவசரகால விடுமுறையில் வெளியே வந்து, விதிமுறைகளை மீறி தலைமறைவான கைதி பால்பாண்டியை தேடிவருகின்றனர்.

Related Stories:

>