×

ஊட்டி தொகுதி பா.ஜ.,விற்கு ஒதுக்கீடு தேர்தல் பணியாற்ற ஆர்வம் காட்டாத அதிமுக.,வினர்

ஊட்டி, மார்ச் 18:     நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமான ஊட்டி தொகுதி உள்ளது. ஊட்டி சட்டமன்ற தொகுதியை குறி வைத்து நீலகிரி மாவட்ட அதிமுக., செயலாளர் வினோத் பணியாற்றி வந்தார். கடந்த ஒராண்டாக இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். அதிமுக., அமைப்பு செயலாளர் புத்திசந்திரனும், ஊட்டி தொகுதியில் சீட் பெற காய் நகர்த்தி வந்தார். இந்த சூழலில் அதிமுக., கூட்டணியில் ஊட்டி தொகுதி பாஜ.,விற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், குன்னூர் தொகுதி சிட்டிங் எம்எல்ஏ.,வான சாந்தி ராமுவிற்கு சீட் மறுக்கப்பட்டு, மாவட்ட செயலாளரான வினோத்திற்கு குன்னூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. அமைப்பு செயலாளர் புத்திசந்திரனுக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனிடையே வினோத்திற்கு, தேர்தல் பணியாற்ற ஊட்டி தொகுதியை சேர்ந்த அதிமுக., நிர்வாகிகள் குன்னூருக்கு சென்று விட்டனர்.

ஊட்டி தொகுதி பாஜக.,விற்கு ஒதுக்கப்பட்டதால், அதிமுக., நிர்வாகிகள் பெரும்பாலானோர் தேர்தல் பணியில் ஈடுபட ஆர்வம் காட்டவில்லை. இதற்கேற்றார் போல் ஊட்டி தொகுதிக்கான பா.ஜ., வேட்பாளர் அறிவிப்பும் தாமதமானதால், பா.ஜ.,வினரும், அதிமுக.,வினரும் சோர்ந்து போயினர். ஊட்டியில் தேர்தல் களம் விறுவிறுப்பின்றியே காணப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2நாட்கள் உள்ள நிலையில், ஒருவழியாக நேற்று மதியம் ஊட்டி தொகுதி பாஜக., வேட்பாளராக கோத்தகிரி பகுதியை சேர்ந்த போஜராஜன் அறிவிக்கப்பட்டார். ஊட்டி தொகுதியை கேட்டு 10க்கும் மேற்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்திருந்த நிலையில், தொகுதிக்கு பரிட்சயமான நபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என பாஜக.,வினர் எதிர்பார்த்திருந்த நிலையில், ஊட்டி தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத குன்னூர் தொகுதியை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவித்துள்ளது கட்சியினர் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. பிரசாரத்திற்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், கூட்டணி கட்சியினரை ஒருங்கிணைத்து, ஊட்டி தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிக்கும் சென்று பிரசாரம் செய்ய முடியுமா என பா.ஜ.,வினர் புலம்பி வருகின்றனர்.

Tags : Ooty ,BJP ,
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்