×

ஒரே நாளில் 108 பேருக்கு கொரோனா

கோவை, மார்ச் 18: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் நேற்று ஒரே நாளில் 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 56,731-ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் 81 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று புதியதாக 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 80 சதவீதம் பேர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். 20 சதவீதம் பேர் ஊரக பகுதியை சேர்ந்தவர்கள். கடந்த மூன்று மாதங்களுக்கு பின் முதல் முறையாக தற்போது கொரோனாவினால் ஒரே நாளில் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது. பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இதே போல், படிப்படியாக உயர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு முழு ஊரடங்கை பிறப்பித்தது. மாநிலம் முழுவதும் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு போட வாய்ப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்க பொதுமக்களின் அலட்சியம் காரணம் என சுகாதாரத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் கூறி வருகின்றனர்.
ஆனால், அதிகாரிகளும் கட்டுப்பாடுகளை கண்காணிப்பதிலும், ஆய்வுகள் செய்வதிலும் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால்தான் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்கள், சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் முறையாக மேற்கொள்வதில்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படுவதில்லை. இதனால், கோவை மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 108 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 731-ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 49 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 539-ஆக உயர்ந்தது. தவிர, தற்போது அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பினால் 506 ேபர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். நேற்று கொரோனா தொற்றினால் கோவை மாவட்டத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 686-ஆக உள்ளது.

Tags :
× RELATED ஆர்வமுடன் வாக்களித்த 100 வயது மூதாட்டி