இரட்டை கொலை வழக்கில் கைதான 11 பேரில் 5 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

ஈரோடு, மார்ச் 18:   ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்த குப்புசாமி மகன் குணா என்ற குணசேகரன் (29), ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்த மாதேஸ்வரன் மகன் கலை என்ற கலைச்செல்வன் (31) ஆகிய இருவரும் கடந்த 2019ம் ஆண்டு ஈரோடு கருங்கல்பாளையம் டாஸ்மாக் கடை அருகே ரமேஷ் என்ற பிரகலாதன் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்து, அடிதடி, வழிப்பறி போன்ற குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பிரகலாதனை கொலை செய்த வழக்கின் விசாரணைக்காக கலைச்செல்வன், குணசேகரன் ஈரோடு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 10ம் தேதி ஆஜராகி விட்டு வெளியே வந்தனர். அப்போது ஈரோடு வீரப்பன் சத்திரம் தெப்பக்குளம் அடுத்த பெரியகுட்டை வீதியில் பிரகலாதனின் நண்பர்கள், பிரகலாதனின் கொலைக்கு பழிக்கு பழியாக கலைச்செல்வனையும், குணசேகரனையும் கத்தியால் குத்தியும், கல்லால் தாக்கியும் இருவரையும் கொடூரமாக கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில், ஈரோடு வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த குமார் மகன் வேட்டை ரவி என்ற ரவிச்சந்திரன் (24), அன்னை சத்யா நகர் சிவராமன் மகனான விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் காவலன் கார்த்தி என்ற கார்த்தி (27), செட்டிபாளையம் இந்திரா நகரை சேர்ந்த மனோகரன் மகன் மதன் (26), ஜான்சி நகர் அம்பேத்கர் மகன் அழகிரி (23), கிருஷ்ணம்பாளையம் ராமமூர்த்தி நகர் பால்ராஜ் மகன் பத்து என்ற பத்மநாதன் (31), அதே பகுதியை சேர்ந்த அல்லா பக்ஸ் மகன் பர்கான் (36), வைராபாளையம் நேதாஜி வீதி ஆறுமுகம் மகன் கிருஷ்ணன் (23), அசோகபுரம் திருநாவுக்கரசு மகன் முரளிதரன் (25), வீரப்பன்சத்திரம் குழந்தை அம்மாள் வீதி பாண்டி மகன் கிங் சிவா (26), வீரப்பன்சத்திரம் சரவணன் மகன் தமிழரசன் (22), மரப்பாலம் ஆலமரத்தெரு அம்பேத்கர் மகன் லோகேஸ்வரன் (22) ஆகிய 11 பேரை ஈரோடு வடக்கு போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கைதான வேட்டை ரவி என்ற ரவிச்சந்திரன், பத்து என்ற பத்மநாபன், மதன், அழகிரி, லோகேஸ்வரன் ஆகிய 5 பேரும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள். இதைத்தொடர்ந்து ஈரோடு எஸ்பி தங்கதுரை பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் கதிரவன் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார். இதன்பேரில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேரிடமும், தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

>