×

முக கவசம் சோதனை தீவிரம் நாகர்கோவிலில் கல்லூரி முதல்வருக்கு கொரோனா 50 மாணவ, மாணவிகளுக்கு சளி பரிசோதனை

நாகர்கோவில், மார்ச் 18: நாகர்கோவிலில் கல்லூரி முதல்வருக்கு கொரோனா வந்ததை தொடர்ந்து  அந்த கல்லூரியில் 50 மாணவ, மாணவிகளுக்கு சளி பரிசோதனை நடந்தது. குமரி  மாவட்டத்தில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரப்படி, கொரோனா  பாதிப்பு 17,200 ஐ தாண்டி உள்ளது. இதில் 16,889 பேர் குணமடைந்துள்ளனர்.  80க்கும் மேற்பட்டவர்கள், சிகிச்சையில் உள்ளனர். 261 பேர் உயிரிழந்துள்ளதாக  கூறப்படுகிறது.  நாள் ஒன்றுக்கு சராசரியாக 15  பேர்  பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இதே போல் இருந்த  எண்ணிக்கை பின்னர், மளமளவென அதிகரித்தது. கேரளாவில் தற்போது பாதிப்பு  அதிகரித்துள்ளதால் குமரி - கேரள எல்லையோர பகுதிகள் சீல் வைக்கப்பட்டு  அங்கிருந்து வருபவர்களிடம் சளி மாதிரி பரிசோதனை நடக்கிறது. வெளிநாடுகளில்  இருந்து வருபவர்களையும் கண்காணித்து தனிமைப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டு  வருகிறார்கள். ஆனால் கொரோனா தற்போது மீண்டும் உள்ளூர் பகுதிகளில் வேகமாக  பரவ தொடங்கி இருப்பதால் அச்சம் அதிகரித்துள்ளது.

கல்லூரிகள்,  பள்ளிகளில் பரவல் அதிகமாகி உள்ளதால், பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளிடம் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்கிடையே நாகர்கோவிலில் பிரபல கல்லூரி  முதல்வருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.  இதையடுத்து அந்த கல்லூரியில் மேலும் 50 மாணவர்கள், 3 பேராசிரியர்களிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை வந்த பரிசோதனையில் மாணவ,  மாணவிகள் யாருக்கும் கொரோனா இல்லை. இன்னும் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு  பரிசோதனை முடிவு வர வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட கல்லூரியில்  நேற்று காலை மாநகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர். முதல்வர்  அலுவலக அறை மற்றும்
அதையொட்டி உள்ள வகுப்பறைகளிலும் கிருமி நாசினி  தெளிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் தலைமையில், மாணவ,  மாணவிகளுக்கு முக கவசம் மற்றும் சமூக இடைவெளி அவசியம் குறித்து  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஜவுளி கடைகள், தனியார் நிறுவனங்கள் மூடப்படும்
மாநகராட்சி  நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் கூறுகையில், வணிக நிறுவனங்கள், நகை  கடைகள், ஜவுளி கடைகள் போன்றவற்றில் தான் கண்டிப்பாக முக கவசம் மற்றும்  சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இங்கு தான் மக்கள் நெருக்கமாக  நிற்கிறார்கள்.  எனவே வணிக நிறுவனங்கள், நகை கடைகள், ஜவுளி  கடைகளில் கண்டிப்பாக கொரோனா விதிமுறை பின்பற்ற வேண்டும். விதிமுறை  பின்பற்றாத நிறுவனங்கள் மூடப்படும். பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக  முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். கூட்டமான  இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றார்.

Tags : Nagercoil ,
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை