அரசு மகளிர் ேமல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 18: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று, கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடந்தது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து பேசியதாவது: மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேர்தல் பணியில் வாக்குச்சாவடி நிலைய தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை 1, நிலை 2 மற்றும் நிலை 3 அலுவலர்கள் என தேர்தல் பணியில் 11,032 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு மண்டல அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து செயல்முறை விளக்கம் மற்றும் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

அனைத்து படிவங்களையும் நிரப்புவது, வாக்குசாவடி அலுவலர்களிடமிருந்து தபால் வாக்குகளுக்கான படிவங்கள் பூர்த்தி செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்குசாவடி அலுவலர்களில் கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உச்சபட்ச மருத்துவ காரணங்களுக்காக விலக்கு கோரும் பட்சத்தில், அரசு மருத்துவ குழுவின் நேரடி விசாரணையின் மூலம் மட்டுமே பரிசீலிக்கப்படும். உரிய காரணங்கள் இன்றி, தேர்தல் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாத வாக்குசாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள அனைவரும், சிறப்பான முறையில் பயிற்சி பெற்று தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு டிஆர்ஓ ரத்தினசாமி, சிஇஓ பாலமுரளி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>