×

பெரியார் காலனி பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பு

திருப்பூர், மார்ச் 17:  திருப்பூர் பெரியார் காலனியில் பஸ் ஸ்டாப் இருந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பூர் அவினாசி ரோடு பெரியார் காலனி பஸ் ஸ்டாப்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை அகற்றப்பட்டது. பின்னர் புதிதாக அமைக்கப்படவில்லை. இதனால், ஆண்டுக்கணக்கில் பொதுமக்கள் வெயில் மற்றும் மழையால் அவதிப்பட்டு வருகின்றனர். நிழற்குடை இருந்த இடம் தற்போது, ஆக்கிரமிப்புகளால் மாயமாகி உள்ளது. அருகில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்களது விளம்பர போர்டு மற்றும் பொருட்களை போட்டு ஆக்கிரமித்துள்ளனர். கடைக்கு பொருட்களை கொண்டு வரும், வேன்கள் பஸ் ஸ்டாப்பில்  நிறுத்தப்படுவதால், பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் நடுரோட்டில் நின்றுதான் பஸ் ஏற வேண்டியுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான பெரியார் காலனியில் இருந்து, பழைய பஸ் நிலையம், புஷ்பா தியேட்டர், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வேலைக்குச் செல்வோர் அதிகம். தற்போது, வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வெயிலில் நிற்க முடியாமல் வயதானவர்களும், பெண்களும் தவிக்கின்றனர். பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பை அகற்றி, அந்த இடத்தில் புதிதாக நிழற்குடை அமைத்து சிரமத்தை போக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Occupancy of ,Periyar Colony Bus Stop ,
× RELATED பெரியார் காலனி பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பு பயணிகள் கடும் அவதி