×

தேர்தல் குறித்து சமூக வலைதளங்களில் போலீசார் ஆடியோ வெளியிடக்கூடாது தென் மண்டல ஐஜி முருகன் அறிவுறுத்தல்

நெல்லை, மார்ச் 17:   தேர்தல் குறித்து போலீசார் ஆடியோ  வெளியிடக்கூடாது என்றும், இதுதொடர்பாக  சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தென் மண்டல ஐஜி முருகன் அறிவுறுத்தினார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக வரும் ஏப். 6ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த பிப். 26ம் தேதி பிற்பகலில் வெளியிட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையொட்டி அமைக்கப்பட்டுள்ள வருவாய்த் துறை அலுவலர்கள், போலீசார் அடங்கிய கண்காணிப்பு குழுவினர், தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் பணம் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு விதிமுறை மீறல்களை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே காவல் துறை சார்பில் பதற்றமான வாக்குச்சாவடிகள், புதிதாக அமைந்த பூத்கள் அவை இடம்பெற்றுள்ள பகுதிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது.

 பாளையில் செயல்படும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தென்மண்டல ஐஜி முருகன் தலைமை வகித்தார். அப்போத அவர் பேசுகையில், ‘‘காவல் அதிகாரிகளுக்கு தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் உள்ள குறைகளை உரிய அலுவலரிடம் கூறி அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத செயல்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் கூடுதலாக முக்கியமான பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சிறப்பு பிரிவில் உள்ள ஏடிஎஸ்பிக்கள் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் பணியின் போது காவலர்கள் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை  முறையாகக் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக விலகலுடன் பணியாற்ற வேண்டும். மேலும் தேர்தல் குறித்து போலீசார் ஆடியோ  வெளியிடக்கூடாது. அத்துடன் இதுதொடர்பாக  சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்’’ என்றார்.  கூட்டத்தில் நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநபு, எஸ்பிக்கள் நெல்லை  மணிவண்ணன், தூத்துக்குடி ஜெயக்குமார், தென்காசி சுகுணாசிங், கன்னியாகுமரி  பத்ரிநாராயணன் மற்றும் நெல்லை சரகத்தை சேர்ந்த ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : South Zone ,IG ,Murugan ,
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு...